நுாற்றுக்கணக்கான ட்ரோன், ஏவுகணைகளை ஏவி உக்ரைன் மீது ரஷ்யா அதிரடி தாக்குதல்

1


கீவ் : உக்ரைனில், நுாற்றுக்கணக்கான, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி, ரஷ்யா நடத்திய தாக்குதலில், 4 பேர் பலியாகினர்; 22 பேர் காயமடைந்தனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நான்காண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எடுத்து வருகின்றன.


இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளில், 246 ஈரான் தயாரிப்பு ட்ரோன்கள், 13 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் மற்றும் 22 குரூஸ் ரக ஏவுகணைகளை அதிகாலை ஏவி, ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இதில், நான்கு பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் கீவில் மட்டும் மூன்று பேர் பலியாகினர். மேற்கு உக்ரைனில், லலீவ் நகரில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கு மற்றும் உட்கட்டமைப்பின் மீது ஒரேஷ்னிக் ஏவுகணை வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது. கீவில் உள்ள கத்தார் துாதரகமும் ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்தது.


உக்ரைனில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், மின்சாரம் மற்றும் தண்ணீர் வினியோகத்தை துண்டித்து மக்களை துன்புறுத்த ரஷ்யா முயல்வதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த மாதம் ரஷ்ய அதிபர் புடினின் இல்லம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக, அந்நாடு குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு பதிலடியாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.


இதற்கிடையே, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். 'வன்முறையை கைவிடவில்லை என்றால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, எச்சரித்துள்ளார்.

ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை



உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், மற்ற ஆயுதங்களுடன் புதிய, 'ஒரேஷ்னிக் பாலிஸ்டிக்' ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்தி உள்ளது. இதை இரண்டாவது முறையாக அந்நாடு பயன்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை, ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. இது வினாடிக்கு 3 கி.மீ., வேகத்திலும், மணிக்கு 13,000 கி.மீ., வேகத்திலும் பயணிக்கும் வேகம் கொண்டது. இது 3,000 முதல் 5,500 கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறனுடையது. ரஷ்யாவில் இருந்து ஏவினால், இது ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளையும் தாக்கும் வலிமை கொண்டது. இந்த ஏவுகணை, 6 போர் கருவிகள் வரை சுமந்து சென்று ஒரே நேரத்தில் வெவ்வேறு இலக்குகளை தாக்கக்கூடியது.


சாதாரண வெடி பொருட்கள் மற்றும் அணு ஆயுதங்கள் என இரு வகையான ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை மிக வேகத்தில் வருவதால் தற்போதுள்ள எந்தவொரு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பாலும், இதைத் தடுத்து நிறுத்த முடியாது.

Advertisement