கிரீன்லாந்து மக்களுக்கு பணம்; இணைப்புக்காக அமெரிக்கா சதி

10


வாஷிங்டன் : கிரீன்லாந்தில் வசிக்கும் மக்களுக்கு பணத்தாசை காட்டி, டென்மார்க்கிடமிருந்து பிரித்து தங்களுடன் இணைத்துக் கொள்ள அமெரிக்கா சதி செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக இருக்கும் கிரீன்லாந்து, எண்ணெய் மற்றும் அரிய கனிமவளங்கள் நிறைந்த தீவு நாடு.
புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி அங்கு புதிய கப்பல் வழித்தடங்களும் உருவாகி வருகின்றன. இதனால் உலக நாடுகள் அத்தீவின் மீது ஆர்வம் காட்டி வருகின்றன.


வட அமெரிக்காவிற்கும், ஆர்க்டிக் கண்டத்திற்கும் இடையில் கிரீன்லாந்து அமைந்திருக்கிறது. எனவே, ரஷ்யா மற்றும் சீன கப்பல்கள் அங்கு சுற்றித்திரிவதால், தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து அவசியம் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். இதனால் பதவியேற்றது முதல் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என, அவர் கூக்குரலிட்டு வருகிறார். கிரீன்லாந்து இணைப்புக்கு ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து வழிகளும் பரிசீலனையில் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


இந்நிலையில், கிரீன்லாந்தில் வசிக்கும், 57,000 பேருக்கு பணத்தாசை காட்டி, டென்மார்க்கிடமிருந்து பிரிக்க அமெரிக்கா சதி செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிரீன்லாந்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தலா 8 லட்சம் - 80 லட்சம் ரூபாய் வரை கொடுத்து, அவர்களை அமெரிக்காவுடன் இணைய சம்மதிக்க வைக்கலாம் என, அமெரிக்கா ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது.


இது குறித்து, டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் கூறுகையில், ''அமெரிக்கா தாக்கினால் நேட்டோ கூட்டணி முடிவுக்கு வந்துவிடும். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பாதுகாப்பு அமைப்பு சிதைந்துவிடும்,'' என, எச்சரித்தார்.


கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் பிரெட்ரிக் நீல்சன், ''இணைப்பு குறித்த கற்பனை போதும். அமெரிக்காவுடன் நல்லுறவு வேண்டும். ஆனால் அழுத்தங்களும் மிரட்டல்களும் தேவையில்லை,'' என்றார்.


பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் அமெரிக்காவின் திட்டத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


'நேட்டோவில் அமெரிக்காவும், டென்மார்க்கும் உறுப்பினர்கள் என்பதால், இத்தகைய நடவடிக்கை கூட்டணிக்கே ஆபத்து. கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல; அதன் எதிர்காலத்தை அந்த மக்களே தீர்மானிப்பர்' என, அவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

'முதலில் சுடுவோம் பிறகு தான் பேசுவோம்'



தென் அமெரிக்க நாடான வெனிசுலா அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து அழைத்து சென்ற சில நாட்களிலேயே, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை இணைப்பது குறித்த பேச்சை துவங்கி உள்ளார்.


இது குறித்து, டென்மார்க் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:கடந்த 1952ல், போர் விதிமுறைப்படி, எந்த வெளிநாட்டு படையெடுப்புக்கும் உடனே எதிர் தாக்குதல் நடத்த வேண்டும். உயர் அதிகாரிகளின் உத்தரவு தேவையில்லை. போர் அறிவிப்பு தெரியாவிட்டாலும் கூட என்று அந்த விதியில் கூறப்பட்டுள்ளது. இந்த விதி இப்போதும் அமலில் உள்ளது. இதனால் கிரீன்லாந்து மீது அமெரிக்கா படையெடுத்தால், எங்கள் வீரர்கள் உத்தரவுக்காக காத்திருக்காமல் உடனடியாக தாக்குதல் நடத்தி, முதலில் சுட்டுவிட்டு பிறகு கேள்வி கேட்பர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement