சமூக விரோத செயலை தடுக்க ரயில்வே குடியிருப்பு அகற்றம்

திருத்தணி: திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள சேதமடைந்த ரயில்வே குடியிருப்புகளில் சமூக விரோத செயல்கள் நடப்பதை தடுக்கும் வகையில், அங்குள்ள எட்டு வீடுகளை ரயில்வே நிர்வாகம் இடித்து அகற்றியது.

திருத்தணி ரயில் நிலையம் அருகே, ரயில்வே குடியிருப்பு உள்ளது.

இதில், ஏராளமான ரயில்வே ஊழியர்கள் வசித்து வந்தனர். இந்நிலையில், முறையாக பராமரிப்பு இல்லாததால், சில ஆண்டுகளுக்கு முன் எட்டு குடியிருப்புகள் சேதமடைந்தது.

இதனால், அங்கு வசித்து வந்த ஊழியர்கள் வெளியேறினர். சேதமடைந்த குடியிருப்பு பகுதியில், சில இளைஞர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த மாதம் ரயில்வே குடியிருப்பில், வடமாநில இளைஞர் சுராஜை, கஞ்சா போதையில் நான்கு சிறுவர்கள் பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

இதில் அதிர்ஷ்டவசமாக சுராஜ் உயிர் பிழைத்தார். இதையடுத்து, ரயில்வே நிர்வாகம் சேதமடைந்த குடியிருப்புகளை இடித்து அகற்ற தீர்மானித்தது.

நேற்று, சேதமடைந்த எட்டு குடியிருப்புகளை ரயில்வே நிர்வாகம், பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றியது.

Advertisement