நிஹால் சரின் 'சாம்பியன்' * கோல்கட்டா செஸ் தொடரில்
கோல்கட்டா: கோல்கட்டாவில், டாடா ஸ்டீல் இந்தியா, 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' ஓபன் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆனந்த், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' முறையிலான போட்டி (9 சுற்று) நடந்தன.
மூன்றாவது நாளான நேற்று, கடைசி 3 சுற்று நடந்தன. 7வது சுற்றில் நிஹால் சரின்-பிரக்ஞானந்தா, ஆனந்த்-விதித் குஜ்ராத்தி மோதிய போட்டி 'டிரா' ஆகின. 8வது சுற்றில் நிஹால் சரின், அமெரிக்காவின் வெஸ்லேயை வீழ்த்தி 'ஷாக்' கொடுத்தார். ஆனந்த்-பிரக்ஞானந்தா மோதிய போட்டி 'டிரா' ஆனது.
ஆனந்த்-நிஹால் சரின் மோதிய கடைசி சுற்று 'டிரா' ஆனது. முடிவில் 6.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்த நிஹால் சரின் சாம்பியன் கோப்பை கைப்பற்றினார். ஆனந்த் (6.0), அர்ஜுன் (5.0) அடுத்த இரு இடம் பெற்றனர்.
திவ்யா 'மூன்று'
பெண்கள் பிரிவில் ரஷ்யாவின் கேத்தரினா லாக்னோ, 6.5 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று, சாம்பியன் ஆனார். ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா கோர்யச்கினா 2 (5.0), இந்தியாவின் திவ்யா 3 வது (4.5) இடம் பெற்றனர்.
கடைசி நேரத்தில்....
கோல்கட்டா செஸ் தொடரில் பங்கேற்க இருந்த, உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ் 20, சொந்த காரணங்களுக்காக விலகினார். இவருக்கு பதில், கடைசி நேரத்தில் இந்தியாவின் நிஹால் சரின் (கேரளா) விளையாடும் வாய்ப்பு பெற்றார். தற்போது, சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.