உபா., சட்ட கைதிக்கு ஆதரவு; நியூயார்க் மேயர் மம்தானிக்கு இந்தியா கண்டனம்

21

புதுடில்லி: உபா., சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித்துக்கு ஆதரவாக கடிதம் எழுதிய நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானியின் செயலுக்கு இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.



டில்லி கலவர வழக்கில் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவன் உமர் காலித், சுமார் 5 ஆண்டுகளாக திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களில் உமர் காலித், ஷர்ஜீல் இமானை தவிர்த்து பிறருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.


இந்த சூழலில், நியூயார்க் நகர மேயரான இந்திய வம்சாவளி ஜோஹ்ரான் மம்தானி, உமர் காலித்துக்கு ஆதரவாக எழுதிய கடிதம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த டிசம்பர் 1ம் தேதி நியூயார்க் மேயராக ஜோஹ்ரான் மம்தானி பொறுப்பேற்ற போது, உமர் காலித்தின் பெற்றோரை சந்தித்துள்ளார். அப்போது, அவர் கைப்பட ஒரு கடிதம் எழுதி வழங்கினார்.


அந்தக் கடிதத்தில், "கசப்புணர்வு குறித்து நீங்கள் பேசிய வார்த்தைகளையும், அது ஒருவரை ஆட்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதை அடிக்கடி நினைவுகூர்வேன்," என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்தை உமர் காலித் தரப்பினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.


இந்த நிலையில், ஜோஹ்ரான் மம்தானியின் இந்த செயலுக்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், "மற்ற ஜனநாயக நாடுகளில் நீதித்துறையின் சுதந்திரத்தை பொது பிரதிநிதிகள் மதிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.


தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வெளிப்படுத்துவது பொதுப் பதவியில் இருப்பவர்களுக்கு பொருந்தாது. இதுபோன்ற கருத்துகளுக்குப் பதிலாக, அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளில் கவனம் செலுத்துவது நல்லது," என்று கூறினார்.

Advertisement