கோவா முன்னாள் முதல்வரின் நிலத்தில் உள்ள ஹோட்டலுக்கு வருவாய்த்துறை சீல்!
பனாஜி; கோவா முன்னாள் முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஹோட்டலுக்கு, வருவாய்த் துறை இன்று சீல் வைத்துள்ளது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லட்சுமிகாந்த் பர்சேகர், நவம்பர் 2014 முதல் மார்ச் 2017 வரை கோவாவின் முதல்வராக இருந்தவர். மனோகர் பாரிக்கர் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் பாஜ.,வில் நீண்ட காலம் உறுப்பினராக இருந்தவர், ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் ஆழ்ந்த பிணைப்பு கொண்டவர்.
இந்நிலையில் கோவாவின் அரம்போலில் உள்ள இவருக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட ஹோட்டலில், விதிமீறல் காரணமாக அதிகாரிகளால் இன்று சீல் வைக்கப்பட்டது.
இது குறித்து விளக்கமளித்த பர்சேகர், நிலம் தனக்குச் சொந்தமானது என்றாலும், தான் அந்த இடத்தை ஒரு ஹோட்டல் அதிபருக்கு குத்தகைக்கு விட்டிருப்பதாகவும், தேவையான அனுமதிகளைப் பெறுவது குத்தகைதாரரின் கடமை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த சீல் வைப்பு நடவடிக்கை கோவா அரசியலில் பரபரப்புக்குள்ளாகி உள்ளது.