உ.பி.,யை வென்றது குஜராத்: ஆஷ்லே கார்ட்னர் அரைசதம்

நவி மும்பை: பெண்கள் பிரிமியர் லீக் போட்டியில் ஆஷ்லே கார்ட்னர் அரைசதம் விளாச, குஜராத் அணி 10 ரன் வித்தியாசத்தில் உ.பி.,யை வீழ்த்தியது.

நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த பெண்கள் பிரிமியர் லீக் போட்டியில் குஜராத், உ.பி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற உ.பி., அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
குஜராத் அணிக்கு பெத் மூனே (13) சுமாரான துவக்கம் கொடுத்தார். சோபி டெவின் (38 ரன், 2x6, 5x4), அனுஷ்கா சர்மா (44 ரன், 7x4) கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய கேப்டன் ஆஷ்லே கார்ட்னர், 41 பந்தில் 65 ரன் (3x6, 6x4) விளாசினார். குஜராத் அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 207 ரன் எடுத்தது. ஜார்ஜியா (27), பாரதி புல்மாலி (14) அவுட்டாகாமல் இருந்தனர்.


சவாலான இலக்கை விரட்டிய உ.பி., அணிக்கு கிரண் (1), ஹர்லீன் தியோல் (0), தீப்தி சர்மா (1) ஏமாற்றினர். கேப்டன் மேக் லானிங் (30), ஷ்வேதா (25) ஆறுதல் தந்தனர். தனிநபராக போராடிய லிட்ச்பீல்ட், 40 பந்தில் 78 ரன் (5x6, 8x4) குவித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 27 ரன் தேவைப்பட்டன. ஆஷா சோபனா வீசிய 20வது ஓவரில், ஒரு சிக்சர், 2 பவுண்டரி உட்பட 16 ரன் மட்டும் கிடைத்தது.

உ.பி., அணி 20 ஓவரில் 197/8 ரன் எடுத்து தோல்வியடைந்தது.

Advertisement