உலக விளையாட்டு செய்திகள்

அரையிறுதியில் மொராக்கோ


ரபாத்: மொராக்கோவில், ஆப்ரிக்க கோப்பை கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. ரபாத் நகரில் நடந்த காலிறுதியில் மெராக்கோ, கேமரூன் அணிகள் மோதின. மொராக்கோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு காலிறுதியில் செனகல் அணி 1-0 என, மாலியை வென்றது.


பைனலில் சுவிட்சர்லாந்து
சிட்னி: ஆஸ்திரேலியாவில், கலப்பு அணிகளுக்கான யுனைடெட் கோப்பை டென்னிஸ் 4வது சீசன் நடக்கிறது. சிட்னியில் நடந்த அரையிறுதியில் சுவிட்சர்லாந்து (பெலிண்டா பென்சிக், வாவ்ரின்கா, ஜாகுப் பால்), பெல்ஜியம் (எலிஸ் மெர்டென்ஸ், ஜிஜோ பெர்க்ஸ்) அணிகள் மோதின. சுவிட்சர்லாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.


ஆஸ்திரியா கலக்கல்

ஹெய்டெல்பெர்க்: ஜெர்மனியில், ஆண்களுக்கான யூரோ ஹாக்கி உள்ளரங்கு சாம்பியன்ஷிப் 22வது சீசன் நடக்கிறது. 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரிய அணி 4-2 என செக்குடியரசு அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஆஸ்திரிய அணி 4-3 என்ற கோல் கணக்கில் போலந்தை வென்றது. இதுவரை விளையாடிய 3 போட்டியில், 2 வெற்றி, ஒரு 'டிரா' என 7 புள்ளிகளுடன் ஆஸ்திரியா முதலிடத்தில் உள்ளது.


சபாஷ் சபலென்கா
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், டபிள்யு.டி.ஏ., சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா 6-3, 6-4 என, செக்குடியரசின் கரோலினா முசோவாவை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 0-6, 3-6 என, உக்ரைனின் மார்டா கோஸ்டியுக்கிடம் தோல்வியடைந்தார்.


எக்ஸ்டிராஸ்

* டையூவில், 'கேலோ இந்தியா' பீச் விளையாட்டு 3வது சீசன் நடந்தது. இதில் 3 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என, 11 பதக்கம் கைப்பற்றிய கர்நாடகா முதலிடம் பிடித்தது. அடுத்த இரு இடங்களை தமிழகம் (3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம்), மணிப்பூர் (3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) கைப்பற்றின.

* வதோதராவில் நடக்கும் டபிள்யு.டி.டி., பீடர் சீரிஸ் டேபிள் டென்னிஸ் 'ரவுண்டு-16' போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யான்ஷி 8-11, 11-9, 11-9, 13-11 என, தென் கொரியாவின் பார்க் கஹியோனை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அனுஷா 11-6, 11-6, 11-9 என தென் கொரியாவின் லீ சியோவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

* கத்தார் தலைநகர் தோகாவில் நடக்கும் டபிள்யு.டி.டி., சாம்பியன்ஸ் டேபிள் டென்னிஸ், ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்திய வீரர் மானவ் தாக்கர் 1-3 (4-11, 11-9, 8-11, 12-14) என, சுவீடனின் டிரல்ஸ் மோர்கார்டுவிடம் தோல்வியடைந்தார்.

* சூரத்தில் நடக்கும் இந்தியன் ஸ்டிரீட் பிரிமியர் லீக் கிரிக்கெட் ('டி10') தொடருக்கான லீக் போட்டியில், 'நடப்பு சாம்பியன்' மும்பை அணி, 13 ரன் வித்தியாசத்தில் ஸ்ரீநகர் அணியை வீழ்த்தியது.

Advertisement