ராமர் கோவிலில் தொழுகை செய்ய முயன்றவரால் பரபரப்பு

7

அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் காஷ்மீரைச் சேர்ந்த நபர், தொழுகை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

உ.பி.,யின் அயோத்தியில், ஸ்ரீராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில், பிரமாண்ட பால ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த அஹமது ஷேக், 55, என்ற நபர், அயோத்தி ராமர் கோவிலில் நேற்று முன்தினம் தரிசனம் செய்தார்.

கருவறையில் இருந்த ராமரை வழிபட்ட பின், அருகில் இருந்த சீதா ரசோய் பகுதியில் சில நிமிடங்கள் அவர் அமர்ந்திருந்தார். அப்போது, அஹமது ஷேக் திடீரென தொழுகை நடத்த முயன்றார்.

அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியபோது, இஸ்லாமிய முழக்கங்களை அவர் எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, உள்ளூர் போலீசாரும், புலனாய்வு அமைப்பினரும் அஹமது ஷேக்கிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தான் ஆன்மிக தலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அடுத்ததாக ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் செல்ல இருப்பதாகவும் கூறினார். அவரின் பயண விபரங்களை சேகரித்த புலனாய்வு அமைப்பினர், விசாரணைக்கு பின் அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக, உள்ளூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் நபர் தொழுகை நடத்த முயன்றதை அடுத்து, அயோத்தி ராமர் கோவிலில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. கோவிலுக்குள் வருபவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, அயோத்தி மாவட்ட நிர்வாகமும், கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீராமஜென்ம பூமி அறக்கட்டளையும் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.

Advertisement