டில்லியில் டிஜிட்டல் அரெஸ்டில் ரூ.15 கோடி இழந்த டாக்டர் தம்பதி

14


புதுடில்லி: டில்லியில் வசிக்கும் டாக்டர் தம்பதியிடம் டிஜிட்டல் கைது எனக்கூறி 15 கோடி ரூபாய் பறித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இது குறித்து சைபர் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


டில்லியில் டாக்டர் தனேஜா வசித்து வருகிறார். அவரது மனைவி இந்திரா. இந்தியாவைச் சேர்ந்த இவர்கள் அமெரிக்காவில் 48 ஆண்டுகள் பணியாற்றினர். பணி ஓய்வுக்கு பிறகு அவர்கள் டில்லியில் வசித்து வருகின்றனர். அங்கு தொண்டு நிறுவனம் ஒன்றுக்காக பணி செய்கின்றனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 24 ம் தேதி, இந்திராவை மொபைலில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், டிஜிட்டல் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தங்களை அவர்கள் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் எனவும், தேச பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கணவன், மனைவிக்கு எதிராக கைது வாரண்ட் உள்ளதாக கூறி மிரட்டி உள்ளனர்.


நேற்று (ஜன.10) வரை இருவரையும் மோசடியாளர்கள் டிஜிட்டல் கைது மூலம் வீட்டில் வைத்து இருந்தனர். இடைப்பட்ட காலத்தில், அவர்கள் பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு 2 கோடி ரூபாய், 2.10 கோடி ரூபாய் என மொத்தம் 14.85 கோடி ரூபாய் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளனர். இந்திரா மொபைல் துண்டிக்கப்படும் போது எல்லாம், அவரது கணவர் தனேஜாவின் மொபைல் மூலம் தொடர்புகொண்டு கண்காணித்து, அவர்களை கண்காணித்து வந்தனர். வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்த போதும் இருவரும் ஏதேதோ காரணங்களை கூறி சமாளித்துள்ளனர்.


நேற்று, இருவரையும் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு செல்லும்படியும், ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் திருப்பித் தரப்படும் எனவும் கூறினர். அதன்படி இருவரும் அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். போலீசாரிடமும், மோசடியாளர்கள் பேசினர்.

அப்போதும் அதிகாரிகள் தோரணையில் உத்தரவிடும்படி பேசினர். ஒரு கட்டத்தில் இந்த மோசடியை போலீசார் கண்டுபிடித்த பிறகு அவர்கள் இணைப்பை துண்டித்தனர். டிஜிட்டல் மோசடியில் ஓய்வு காலத்திற்காக சேமித்து வைத்த பணம் அனைத்தும் போனதை கண்டு இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அதிகளவு பணம் பறிபோயுள்ள காரணத்தினால், சைபர் பிரிவு போலீசார் சிறப்புக் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement