மதுரையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் தீவிரம்! ஜன.16ல் துணை முதல்வர், ஜன.17ல் முதல்வர் வருகை

மதுரை: மதுரையில் ஜன. 15 முதல் 17 வரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் களைகட்டி வருகின்றன.

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லுார் பகுதிகளில் தமிழர்களின் வீர அடையாளமான ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படுகின்றன.

இந்தாண்டு ஜன. 15ல் அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது. ஜன. 16ல் பாலமேட்டில் நடைபெறவுள்ள போட்டியை துணை முதல்வர் உதயநிதி, ஜன. 17ல் அலங்காநல்லுாரில் நடைபெறவுள்ள போட்டியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றனர்.

இப்போட்டிகளுக்காக காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான பதிவு ஆன்லைன் வாயிலாக ஜன. 7, 8ல் நடந்தது. அவனியாபுரத்தில் 3090, பாலமேட்டில் 5747, அலங்காநல்லுாரில் 6210 என மொத்தம் 15 ஆயிரத்து 47 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டை விட 2415 காளைகள் அதிகம். அதுபோல் அவனியாபுரத்தில் 1849, பாலமேட்டில் 1913, அலங்காநல்லுாரில் 1472 என மொத்தம் 5 ஆயிரத்து 234 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். கடந்தாண்டை விட 735 வீரர்கள் அதிகம்.

மாடுகள், வீரர்களை தேர்வு செய்ய வருவாய், கால்நடை பராமரிப்பு, மருத்துவம் ஆகிய துறை அலுவலர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுவோர்

ஆன்லைன் வாயிலாகவே 'க்யூ ஆர்' கோடு கொண்ட டோக்கன்களை பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. டோக்கன் வைத்திருப்போர் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். போலி டோக்கன்கள் மூலம் போட்டிகளில் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடு இந்தாண்டு முதல்முறையாக போட்டிகளில் எல்.இ.டி., திரைகள் மூலம் அறிந்துகொள்ளும் வகையில் 'ஸ்கோர் போர்டு' அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு சுற்றிலும் பிடிகொடுக்காமல் வென்ற மாடுகள், பிடித்த வீரர்களின் விபரங்களை எளிதில் அறியலாம். வாடிவாசலுக்கு வரும் முன்பே காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.

மது அருந்திய வீரர்கள், உடல்நலம் குன்றிய காளைகள் அனுமதிக்கப்படாது. பார்வையாளர்கள் கேலரிக்குகூடுதல் பாதுகாப்பு, அவசர கால சிகிச்சைக்கு நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அலங்காநல்லுாரில் முதல்வர் வருகையை முன்னிட்டு இரண்டடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டினர் போட்டிகளை கண்டு ரசிப்பதற்கான கேலரிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பயிற்சி போட்டிகளில் வெல்ல ஓடுவது, மூச்சு பயிற்சி, இளவட்டக்கல் துாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வீரர்கள்மேற்கொண்டு வருகின்றனர். காளைகளுக்கு நீச்சல், மண் குத்தும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.சிறந்த மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு டிராக்டர், கார், தங்க காசு உள்ளிட்ட கவர்ச்சிகரமான பரிசு வழங்கப்படவுள்ளன.

Advertisement