பிளாஸ்டிக் பொருள் பறிமுதல் ரூ.11,000 அபராதம் வசூல்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைக்காரர்களுக்கு 11,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

திருவள்ளூர் நகராட்சியில், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப், பை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என, கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இருப்பினும், திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள பூக்கடைகள், சாலையோர உணவகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகளவில் உள்ளது.

இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் தாமோதரன் உத்தரவின்படி, நேற்று சுகாதார அலுவலர் மோகன் தலைமையிலான ஊழியர்கள், உழவர் சந்தை, சி.வி.நாயுடு சாலை, ராஜாஜிபுரம், பெரியகுப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.

இதில், 75 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதை விற்பனைக்காக வைத்திருந்த கடைக்காரர்களுக்கு, 11,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது எனவும், கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement