போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2ம் கட்ட நடவடிக்கை; காசா அமைதி வாரியம் அமைத்தார் அதிபர் டிரம்ப்

1


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், காசா அமைதி வாரியத்தை அமைப்பதாக அறிவித்தார். அவர், இது பிராந்தியத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க ஆதரவு திட்டத்தின் இரண்டாவது கட்ட நடவடிக்கை என்று தெரிவித்தார்.


ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான நான்கு ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டுவர அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா முன்மொழிந்தது.


இந்த அமைதி ஒப்பந்தம் குறித்து, சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, புளோரிடாவில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக பேசப்பட்டு இருந்தது.


தற்போது மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஆதரவு திட்டத்தின் ஒரு பகுதியாக, காசா அமைதி வாரியத்தை அமைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:


காசாவின் 20 அம்ச அமைதித் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு நாங்கள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துவிட்டோம். அமைதி வாரியம் அமைக்கப்பட்டு இருக்கிறது. காசா நிர்வாகத்திற்கான தேசியக் குழுவிற்கு நான் ஆதரவளிக்கிறேன்.


எகிப்து, துருக்கி மற்றும் கத்தார் ஆகியவற்றின் ஆதரவுடன், ஹமாஸுடன் ஒரு விரிவான ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை நாங்கள் உறுதி செய்வோம். இதில் அனைத்து ஆயுதங்களையும் ஒப்படைப்பதும், ஒவ்வொரு சுரங்கப்பாதையையும் அகற்றுவதும் அடங்கும்.


ஹமாஸ் உடனடியாக தனது வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும். இஸ்ரேலிடம் உயிரிழந்தவர்களின் உடலைத் திருப்பி ஒப்படைப்பது உட்பட, தாமதமின்றி முழுமையான ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.


நான் முன்பே கூறியது போல், அவர்கள் இதை எளிதான வழியிலோ அல்லது கடினமான வழியிலோ செய்யலாம். காசா மக்கள் போதுமான அளவு துன்பப்பட்டுவிட்டார்கள். இதுவே சரியான நேரம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement