வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல்; ஆசிரியர் வீட்டுக்கு தீ வைத்து அட்டூழியம்

20


டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ஆசிரியர் வீட்டுக்கு கும்பல் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றதிலிருந்து அங்கு ஹிந்துக்கள் மீதான வன்முறை தீவிரமடைந்து வருகிறது. கடந்தாண்டு, ஜூன் 6ம் தேதி முதல் இந்தாண்டு, ஜனவரி 5ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நாடு முழுவதும், 45 மாவட்டங்களில் 116 கொலைகள் நடந்துள்ளன.


கொலை, கொள்ளை, வீடுகள், வணிக நிறுவனங்கள், கோவில்கள் சூறையாடல், தீ வைத்தல், போலி மத குற்றச்சாட்டுகளின் பேரில் சித்ரவதை, பாலியல் வன்கொடுமை முயற்சி என ஹிந்துக்கள் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன. குறிப்பாக, கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 51 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தற்போது தலைதூக்கி உள்ள வன்முறையில் ஹிந்துக்கள் 8 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு உள்ளனர். வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு ஹிந்து குடும்பத்தின் வீடு குறிவைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. ஆசிரியர் பிரேந்திர குமார் டேயின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement