பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பிப்., 3 முதல் வேலைநிறுத்தம் 'ஆக்டோ ஜியோ' அறிவிப்பு

3

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி, 'ஆக்டோ ஜியோ' என்ற அரசு ஊழியர் அமைப்பு சார்பில், பிப்., 3 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்புகளான, 'ஜாக்டோ ஜியோ, போட்டோ ஜியோ' அமைப்புகள் சார்பில், இம்மாதம் 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த திட்டத்துக்கு, ஜாக்டோ ஜியோ, போட்டோ ஜியோ நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்தனர்; மேலும், வேலைநிறுத்தப் போராட்டத்தையும் வாபஸ் பெற்றனர்.

இதற்கிடையில், பல்வேறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள், தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த விஷயத்தில் அதிருப்தியில் இருந்த அந்த சங்கங்கள் ஒருங்கிணைந்து, புதிதாக ஆக்டோ ஜியோ எனும் அமைப்பை ஏற்படுத்தி உள்ளன.

அதன் ஆட்சிமன்ற குழு கூட்டம், தலைமை அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது.

அதில், பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக்டோ ஜியோ சார்பில், வரும் பிப்., 3ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும், இடை நிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், பகுதி நேர ஆசிரியர் கண்ணன் உயிரிழப்பை கண்டித்தும், நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement