கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்

4

சென்னை: 'நியாயமற்ற போராட்டத்தால், தமிழகத்தில் தொழிலை நடத்த முடியாத சூழல் உருவாகும்' என, கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

கறிக்கோழி வளர்ப்பு என்பது ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படு கிறது. இதில் கோழி வளர்ப்பு நிறுவனங்களும், கோழி பண்ணை அமைத்திருக்கும் வளர்ப்பாளர்களும் இணைந்து உற்பத்தி செய்கின்றனர்.

கோழிகளை சந்தைப்படுத்தும் தரத்திற்கு வளர்த்து தர, வளர்ப்பாளர்களுக்கு வளர்ப்பு தொகையை, நிறுவனங்கள் வழங்குகின்றன. இது, கோழிகள் இரண்டு கிலோ உடல் எடையை அடைகிறது என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.

இந்த நிலையை அடைய, 35 - 40 நாட்களாகின்றன. கோழி வளர்ப்பாளர்கள், நிறுவனங்களின் வழிகாட்டுதலை பின்பற்றி, குறித்த நேரத்தில் தீவனம் வழங்குவது உள்ளிட்ட முறையான பணிகளை பின்பற்றி, வளர்ப்பில் ஈடுபட வேண்டும்.

அப்போதுதான், கோழிகள் ஆரோக்கிய முறையில், இரண்டு கிலோ எடையை அடையும். இதன் வாயிலாக கிடைக்கும் லாபத்தில், நிறுவனங்களால் விவசாயிகளுக்கு வளர்ப்பு தொகை வழங்க முடியும்.

இது, பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தெரியும். வளர்ப்பு தொகையாக கோழிக்கு கிலோவுக்கு, 11 - 12 ரூபாய் கிடைக்கிறது.

நோய் உள்ளிட்ட எதிர்பாராத காரணங்களால் கோழி இறந்து விட்டாலோ, எடை குறையும் பட்சத்திலோ, குறைந்தபட்சமாக 6.50 ரூபாய் பங்களிப்பு தொகை வழங்கப்படுகிறது.

தற்போது, சில அமைப்பினர் கோழி வளர்ப்பாளர்களுக்கு, குறைந்தபட்ச பாதுகாப்பு தொகையையே, 20 ரூபாய் வாங்கி தருகிறோம் என்ற தவறான வாக்குறுதியை கொடுத்து, போராட்டத்தில் ஈடுபடுமாறு வற்புறுத்துகின்றனர். நியாயமற்ற கோரிக்கையை வைத்து, பிரச்னைகளை உருவாக்குகின்றனர்.

இதனால், அண்டை மாநிலங்களுடன் வியாபார ரீதியாக தாக்குப்பிடிக்க முடியாமல், தமிழகத்தில் தொழிலை நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement