இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்

சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னித்தீர்த்த கடல், காவிரி பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆண்டுதோறும் தை அமாவாசை நாளில், மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று தை அமாவாசை தினம் (ஜன.18) என்பதால் நீர் நிலைகளில் ஏராளமானோர் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.குறிப்பாக, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இன்று அதிகாலையில் ராமேஸ்வரம் அக்னித்தீர்த்தக் கடலில் குவிந்தனர்.

அங்கு புனித நீராடி மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு எள், பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். பின்னர் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடினர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு வேதியர்கள் மற்றும் ஆச்சாரியர்கள் துணை கொண்டு பலி கர்ம பூஜைகள் நடத்தினர். பின்னர் அரிசி, காய்கறிகள், தானியங்கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை தானமாக கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

இதுபோல திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள ருத்ரபாதம் அருகே ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். மயிலாடுதுறை துலா கட்ட காவிரியிலும் ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். திருவையாறு புஷ்ய மண்டப படித்துறையில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

ராமேஸ்வரம், பூம்புகார் போன்று கோவை மாவட்டம், பேரூர் படித்துறை, பவானி கூடுதறை உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலே திரண்டு மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

Advertisement