3வது பாலியல் வழக்கு; காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ மீண்டும் கைது

4

திருவனந்தபுரம்: கேரள காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ ராகுல் மம்கூடத்தில், 3வது பாலியல் பலாத்கார புகாரில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலக்காடு தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ராகுல் மம்கூடத்தில் மீது ஏற்கனவே இரு பாலியல் பலாத்கார புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. முதல் வழக்கில் அவரை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 2வது வழக்கில் முன் ஜாமின் பெற்று வெளியே உள்ளார். அடுத்தடுத்த பாலியல் புகாரில் சிக்கிய அவரை, கட்சியில் இருந்து நீக்கம் செய்து காங்கிரஸ் உத்தரவிட்டது.

இந்த நிலையில், கனடாவில் வசித்து வரும் கேரளாவின் பத்தினம்திட்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர், எம்எல்ஏ ராகுல் மம்கூடத்தில் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, தன்னை கர்ப்பமாக்கியதாகவும், அதன்பிறகு, கர்ப்பத்தை கலைக்கக் சொல்லி, திருமணம் செய்ய மறுப்பதாக புகார் கூறியிருந்தார். மேலும், தன்னிடம் இருந்து நிறைய பணத்தையும் பறித்துக் கொண்டதாக போலீசாரிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (ஜனவரி 10) பாலக்காட்டில் ஒரு விடுதியில் தங்கியிருந்த எம்எல்ஏ ராகுல் மம்கூடத்திலை, நள்ளிரவில் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. அதன்பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஆணையிட்டார். அதன்பேரில், நள்ளிரவு 1 மணியளவில் அவரை காவலில் எடுத்த போலீசார், பத்தினம்திட்டாவில் உள்ள போலீஸ் முகாமுக்கு அழைத்து சென்றனர்.

Advertisement