பைனலில் விதர்பா அணி * விஜய் ஹசாரே டிராபி தொடரில்

பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபி பைனலுக்கு முன்னேறியது விதர்பா அணி. அரையிறுதியில் 6 விக்கெட்டில் கர்நாடகாவை வீழ்த்தியது.
இந்தியாவில் விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் ஒருநாள் தொடர் நடக்கிறது. 38 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று பெங்களூருவில் நடந்த முதல் அரையிறுதியில் கர்நாடகா, விதர்பா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கர்நாடகா, பேட்டிங் செய்தது.
கர்நாடக அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் (9), தேவ்தத் படிக்கல் (4) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. துருவ் பிரபாகர் (28) நிலைக்கவில்லை. அடுத்து இணைந்த கருண் நாயர், கிருஷ்ணன் ஸ்ரீஜித் ஜோடி, அணிக்கு கைகொடுத்தது. இருவரும் அரைசதம் அடித்தனர். நான்காவது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்த போது, கருண் நாயர் (76) அவுட்டானார்.
அடுத்த சில நிமிடத்தில் கிருஷ்ணன் (54) வெளியேறினார். ஷ்ரேயஸ் கோபால் 36 ரன் எடுக்க, அபினவ் மனோகர் 26 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். பின் வரிசையில் விஜயகுமார் 17 ரன் எடுத்தார். கர்நாடக அணி 49.4 ஓவரில் 280 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. விதர்பா சார்பில் தர்ஷன், அதிகபட்சம் 5 விக்கெட் சாய்த்தார்.
பின் களமிறங்கிய விதர்பா அணிக்கு அதர்வா (6), அமன் ஜோடி துவக்கம் கொடுத்தது. துருவ் 47 ரன் எடுத்தார். அமன் 122 பந்தில் 138 ரன் எடுக்க, வெற்றி எளிதானது. விதர்பா அணி 46.2 ஓவரில் 284/4 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. ரவிக்குமார் (76) அவுட்டாகாமல் இருந்தார்.

Advertisement