இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்த நியூசிலாந்து * கவாஸ்கர் வியப்பு

1

புதுடில்லி: ''இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்தது,'' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்தியா, 7 விக்கெட்டில் தோற்றது.
இதுகுறித்து இந்திய அணி ஜாம்பவான் வீரர் கவாஸ்கர் 76, கூறியது:
ராஜ்கோட் ஆடுகளத்தில் இருந்த மந்தமான நிலையை, இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வர், நியூசிலாந்து அணியை 260 முதல் 270 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி விடுவர், என்று தான் எல்லோரும் நினைத்தனர். இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என்று தான் நானும் நினைத்தேன்.
மாறாக 285 ரன் என்ற இலக்கை நியூசிலாந்து அணியினர், எளிதாக எடுத்து அதிர்ச்சி கொடுத்தனர். இது எனக்கு வியப்பாக இருந்தது. நியூசிலாந்து பவுலர்களை பொறுத்தவரையில் சுழற்பந்து வீச்சில் மட்டும் அல்லாது, ஆடுகளத்தின் சூழலையும் சிறப்பாக பயன்படுத்தி, நெருக்கடி தந்தனர். பேட்டிங்கில் சுமார் 300 ரன் என்ற இலக்கை எப்படி 'சேஸ்' செய்ய வேண்டும் என வில் யங், மிட்செல் பாடம் நடத்திக் காட்டினர். துவக்கத்தில் 'செட்டில்' ஆக சற்று நேரம் எடுத்துக் கொண்டு, அடுத்து, அடித்து விளையாடத் துவங்கினர்.
2வது போட்டியில் இந்தியா வென்றிருந்தால், 3வது, கடைசி ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் போன்ற இதுவரை வாய்ப்பு கிடைக்காத வீரர்கள், களமிறங்கும் 'லெவன்' அணியில் இடம் பெற்றிருக்கலாம். தற்போது நியூசிலாந்து வென்று விட்டதால், இதுபோன்ற சோதனை முயற்சிகளுக்கு, இந்துாரில் இடமிருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

இழப்பதற்கு எதுவுமில்லை
நியூசிலாந்து அணி முன்னாள் வீரர் சைமன் டவுல் கூறுகையில்,'' இந்திய மண்ணில் இதுவரை நாங்கள் ஒருநாள் தொடரை வென்றது கிடையாது. முதன் முறையாக இதற்கான வாய்ப்பு வந்துள்ளது. எனினும் மூன்றாவது போட்டி நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி தராது. ஏனெனில் எங்களிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை. இந்திய அணியை பொறுத்தவரையில் இதுபோன்ற இக்கட்டான சூழலை சமாளித்து, ஒரு தொடரில் 3 அல்லது 5வது போட்டியில் வெல்வது எப்படி என நன்றாகத் தெரியும்,'' என்றார்.

Advertisement