இளம் இந்தியா அபார வெற்றி * யூத் உலக கோப்பை போட்டியில்

புலவாயோ: யூத் உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, 'டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே, நமீபியாவில், 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) 16வது சீசன், நேற்று துவங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி 'ஏ' பிரிவில் வங்கதேசம், அமெரிக்கா, நியூசிலாந்துடன் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் இந்திய அணி, அமெரிக்காவை எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மாத்ரே, பீல்டிங் தேர்வு செய்தார்.
ஹெனில் 'ஐந்து'
அமெரிக்க அணிக்கு அம்ரிந்தர் கில், சாஹில் ஜோடி துவக்கம் தந்தது. இந்திய அணி தரப்பில் ஹெனில் படேல் 'வேகத்தில்' அசத்தினார். தனது முதல் ஓவரில் அம்ரிந்தரை (1) அவுட்டாக்கினார். மீண்டும் மிரட்டிய ஹெனில், கேப்டன் ஸ்ரீவஸ்தவா (0), அர்ஜுன் (16) என இருவரையும் தனது ஒரே ஓவரில் வெளியேற்றினார். அமெரிக்க அணி 39/5 என திணறியது.
அடுத்து இணைந்த அத்னித் (18), நிதிஷ் சுதினி ஜோடி சற்று ஆறுதல் தர, அமெரிக்க அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. கடைசியில் நிதிஷ், அதிகபட்சம் 36 ரன் எடுத்து அவுட்டானார். அமெரிக்க அணி 35.2 ஓவரில் 107 ரன்னுக்கு சுருண்டது. இந்தியாவின் ஹெனில் படேல், 5 விக்கெட் சாய்த்தார்.
மழை தொல்லை
எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி ஜோடி துவக்கம் கொடுத்தது. 4 பந்தில் 2 ரன் மட்டும் எடுத்த வைபவ், ரித்விக் 'வேகத்தில்' போல்டானார். இந்திய அணி 4 ஓவரில் 21/1 ரன் எடுத்திருந்த போது, மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. மீண்டும் போட்டி துவங்கியதும், 37 ஓவரில் 96 ரன் எடுக்க வேண்டும் என, இந்திய அணியின் இலக்கு மாற்றப்பட்டது.
மீண்டும் மிரட்டிய ரித்விக், இந்தியாவின் வேதாந்த்தை (2) வெளியேற்றினார். ஆயுஷ் 19 ரன் எடுத்த நிலையில், ரிஷாப் பந்தில் அவுட்டானார்.
விஹான் 18 ரன் எடுத்தார். அடுத்து வந்த அபிக்யான், பவுண்டரிகளாக விளாசி, வேகமாக ரன் சேர்த்தார். இந்திய அணி 17.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 99 ரன் எடுத்தது. 'டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபிக்யான் (42 ரன், 5 பவுண்டரி, 1 சிக்சர்), கனிஷ்க் (10) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகனாக ஹெனில் படேல் தேர்வானார்.

Advertisement