விஐபி ஒதுக்கீடு இல்லை, உள்ளூர் உணவுகள்: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சிறப்பு அம்சங்கள்

11


- நமது சிறப்பு நிருபர் -





இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில், விஐபி மற்றும் எமர்ஜென்சி ஒதுக்கீடு ஆகியவை இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ரயிலில் உள்ளூர் உணவுகள் வழங்கப்பட உள்ளது.


வந்தே பாரத் ரயிலுக்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை இயக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதில் முதல் ரயிலை மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் இருந்து அசாமின் கவுகாத்தி வரை இம்மாத இறுதி முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் ரயில்வே மும்முரமாக ஈடுபட்டுள்ளது.


இந்நிலையில், இந்த ரயில் தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: படுக்கை வசதிகள் கொண்ட முதலாவது வந்தே பாரத் ரயில், பொது மக்களுக்கானதாக இருக்கும். இதில் விஐபிக்கள் அல்லது எமர்ஜென்சி கோட்டாவுக்கு அனுமதி இல்லை. ரயில்வே உயர் அல்லது மூத்த அதிகாரிகள், பாஸ் மூலம் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


காத்திருப்பு பட்டியலை தவிர்க்க உறுதி செய்யப்பட்ட டிக்கெட்கள் மட்டுமே வழங்கப்படும். பயணிகளுக்கு போர்வைகள், விரிப்புகள் அனைத்தும்,மற்ற ரயில்களை காட்டிலும் சிறந்ததாகவும், நவீனமாகவும் இருக்கும்.

இந்த ரயிலில் செல்லும் பயணிகள், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன், வெளிப்படையான டிக்கெட் முறைகள் மற்றும் சீரான விதிமுறைகளை அனுபவிப்பார்கள். அவர்களுக்கு உள்ளூர் உணவுகள் வழங்கப்படும். அனைத்து ஊழியர்களுக்கும் சீருடை அணிவார்கள். இது இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலில் 3ம் ஏசி வகுப்பு வசதி கொண்ட 11 பெட்டிகளும், 2ம் வகுப்பு ஏசி கொண்ட 4 பெட்டிகளும், முதல் வகுப்பு ஏசியுடன் ஒரு பெட்டிகளும் இணைக்கப்பட்டு இருக்கும். ரயிலில் 3ம் ஏசி வகுப்புகளில் 611 பெர்த்களும், 2ம் ஏசி வகுப்புகளில் 188 பெர்த்களும், முதல் வகுப்பு ஏசியில் 24 பெர்த்களும் இருக்கும். மொத்தம் 823 பெர்த்கள் இருக்கும் வகையில் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement