சென்னையில் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி: பா.ஜ., வலியுறுத்தல்

3

சென்னை: தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை மாநகர காவல் துறைக்கு சவால் விடும் கொலைகாரர்களின், சமூக விரோதிகளின், கொட்டத்தை அடக்க காவல்துறை பொறுப்பு அமைச்சர் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுத்து தொடர் படுகொலைகளுக்கு, சமூக விரோதிகளின் கஞ்சா போதை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சென்னை கொலை நகரமா? நடப்பது ரவுடிகளின் ஆட்சியா? காவல்துறை மேல் சமூக விரோதிகளுக்கு பயமில்லாமல் போனது ஏன்? என்கிற விவாதத்துக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கொலை குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட வேண்டும். துணிந்து ரவுடிகள் செய்யும் இந்த படுகொலைகளை தடுக்காவிட்டால் அவர்களை கட்டுப்படுத்தாவிட்டால், சாதாரண குடிமகன் தொடங்கி, அரசு அதிகாரிகள், காவல்துறையினர், அரசியல்வாதிகள் என அனைவருமே கொலை செய்யப்படக்கூடிய ஆபத்து சென்னையில் அதிகமாகிவிடும்.

புதிய சட்ட வழிமுறைகள்



எனவே போலீஸ் கமிஷனர் அருண், ரவுடியிசத்தை படிப்படியாக முற்றிலும் ஒழிக்க வேண்டும். அரசின் துறை சார்ந்த அலுவலகங்கள், நீதிமன்றங்கள் காவல் நிலையங்கள், மருத்துவமனைகளில் துணிந்து இது போன்ற படு பயங்கர கொலைகளை செய்யும் கொலைகாரர்கள் மற்றும் இதன் பின்னணியில் சதி செயலில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு பறிமுதல் செய்ய வேண்டும்.

மேலும் இது போன்ற படு பயங்கர குற்றங்களில் ஈடுபடுபவர்களிடம் குறைந்தபட்சம் 10 லட்ச ரூபாய் பிணைத்தொகை அளிக்கப்படாமல் நீதிமன்றங்களில் ஜாமின் வழங்கக்கூடாது என்ற நிலையை உருவாக்க தமிழக போலீஸ், நீதிமன்றங்கள், தமிழக அரசு இணைந்து புதிய சட்ட வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.

அந்த வேகம் எங்கே?



பா.ஜ.,வின் பேச்சுரிமையை கருத்துரிமையை எதிர்த்து அரசியல் உள்நோக்கத்துடன் போலி வழக்குகள் பதிவு செய்து, இரவு பகல் இன்று பாராமல் தேடித்தேடி சென்று போலீசார் கைது செய்கின்றனர். திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து உரிமை கேட்டு போராடும் பொதுமக்கள், ஊழியர் சங்கங்கள், அமைப்புகளின் மீது அடக்கு முறையுடன் தடியடி நடத்தி பொய் வழக்கு போட்டு கைது செய்கின்றனர்.

மேலும் உண்மைகளை உரக்கச் செல்லும் பத்திரிகையாளர்கள், யூ டியூபர்கள், சமூக ஆர்வலர்களை விரட்டி விரட்டி கைது செய்து குண்டத்தடுப்பு சட்டத்தில் அடைக்கும் காவல்துறையினர் பட்டப் பகலில் பயங்கர படுகொலைகளை செய்யும், இரக்கமற்ற வெறி பிடித்த கொலை குற்றவாளிகளை அதே வேகத்தில் கைது செய்யாதது ஏன்? தமிழக காவல்துறைக்கு அமைச்சராக இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னை மாநகர காவல் துறையை முழுமையாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement