இதே நாளில் அன்று

ஜனவரி 14:

தஞ்சாவூர் மாவட்டம், கும்ப கோணத்தில், சவுராஷ்ட்ரா சமூகத்தின் வீரய்யர் - சீதையம்மாள் தம்பதியின் மகனாக, 1920 மே 18ல் பிறந்தவர், எம்.வி.வெங்கட்ராம்.

இவரது தாய் மாமனான வெங்கடாசலம் - சரஸ்வதி தம்பதியால் தத்தெடுக்கப்பட்ட இவர், பி.ஏ., பொருளாதாரம் படித்தார். பின், குடும்ப தொழிலான பட்டு ஜரிகை வணிகம் செய்தார். 'மணிக்கொடி, கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி' இதழ்களில் கதைகள் எழுதினார்.

தொடர்ந்து, ஆங்கில கதைகளை தமிழில் மொழிபெயர்த்தார். 'தேனீ' இலக்கிய இதழை நடத்தி, தன் வீட்டையே இலக்கியவாதிகளின் சந்திப்பு கூடமாக்கினார். இவர், தன் கதைகளை தொகுத்து, 'எம்.வி.வெங்கட்ராம் கதைகள்' என்ற நுாலாக வெளியிட்டார். பள்ளி மாணவர்களுக்காக, 60 தேசபக்தர்கள் பற்றிய சிறு நுால்களை எழுதினார்.

'நித்தியகன்னி, வேள்வித்தீ' உள்ளிட்ட நாவல்கள், 'குயிலி, உறங்காத கண்கள்' உள்ளிட்ட சிறுகதை தொகுதிகளுடன் சில குறுநாவல் தொகுப்புகள், கட்டுரை தொகுப்புகளையும் வெளியிட்டார். 'காதுகள்' நாவலுக்காக, 'சாகித்ய அகாடமி' விருது பெற்ற இவர், தன், 80 வயதில், 2000வது ஆண்டு, இதே நாளில் மறைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!

Advertisement