கனிம சுரங்க வழக்கில் ரெட்டிக்கு மீண்டும் சிக்கல்

: கனிம சுரங்க வழக்கில், பா.ஜ., --- எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டிக்கு, மீண்டும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கர்நாடகா -- ஆந்திரா மாநில எல்லை பகுதிகளை ஆக்கிரமித்து, அவரது நிறுவனங்கள் சுரங்க தொழில் செய்தது தெரியவந்து உள்ளது.

கொப்பால் கங்காவதி பா.ஜ., -- எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி. கனிம சுரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கும் இவருக்கு, கர்நாடகா, ஆந்திராவில் கனிம சுரங்கங்கள் உள்ளன.

சட்டவிரோதமாக கனிம சுரங்க தொழில் நடத்தியதாக, கடந்த 2011ல் இவரை, சி.பி.ஐ., கைது செய்தது. விசாரணையில் பொது கருவூலத்திற்கு 850 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு ஏற்படுத்தியது தெரிந்தது.

இந்த வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கடந்த ஆண்டு ஹைதராபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இந்த உத்தரவை தெலுங்கானா உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், தற்போது அவர் வெளியில் உள்ளார்.

இந்நிலை யில், கர்நாடகா -- ஆந்திரா மாநில எல்லையில் உள்ள சுரங்க நிறுவனங்கள், எல்லையை ஆக்கிரமித்து உள்ளதா என்பதை கண்டறிய, ஓய்வு பெற்ற நீதிபதி சுதன்ஷு துலியா தலைமையில், உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது.

இந்த குழு, எல்லை பகுதியில் உள்ள, ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான 4 நிறுவனங்கள் உட்பட 6 கனிம சுரங்க நிறுவன பகுதிகளில், ட்ரோன் உட்பட அதிநவீன முறையில் கடந்த மாதம் கணக்கெடுப்பு நடத்தியது.

இந்த கணக்கெடுப்பின் போது ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான நான்கு நிறுவனங்களும், எல்லை பகுதியை ஆக்கிரமித்து சுரங்க தொழில் செய்து வருவது கண்டறியப்பட்டு உள்ளது.

குறிப்பாக எல்லை பகுதியில் உள்ள சுங்கலம்மா கோவில் அருகே, சட்டவிரோத சுரங்க தொழில் நடப்பது பற்றியும் கண்டறிந்து, அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.


கூடிய விரைவில் இந்த அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். இது, ரெட்டிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.


-- நமது நிருபர் --

Advertisement