ஈரானில் தொடரும் போராட்டம்: பலி 2,571 ஆக அதிகரிப்பு

3


டெஹ்ரான்: ஈரானில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,571 ஆக அதிகரித்துள்ளது.


ஈரானில் பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பு பிரச்னை, அரசியல் அடக்குமுறை, கருத்துச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராக, கடந்த சில வாரங்களாக நாடு முழுதும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கட்டுப் படுத்த, இணைய சேவை முடக்கம், ஊடக கட்டுப்பாடு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக, போராட்டங்கள் வன்முறையாக மாறி, பல நகரங்களில் உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

டிசம்பர் இறுதி வரை பலி எண்ணிக்கை 20 என்ற அளவில் இருந்தது. அதன் பின், படிப்படியாக உயர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் பலி எண்ணிக்கை, 50ஐ கடந்தது. தற்போதைய நிலவரப்படி உயிரிழப்புகள் மிகப்பெரிய அளவுக்கு உயர்ந்து 2,571 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 2,403 பேர் போராட்டக்காரர்கள் என்றும், 147 பேர் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள். பொதுமக்கள் 9 பேரும், குழந்தைகள் 12 பேரும் அடங்குவர். 18,100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.



ஈரானில் இணையம் முடக்கப்பட்டிருப்பதால், வெளிநாட்டிலிருந்து ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிப்பது மிகவும் கடினமாகிவிட்டது. தற்போது நிகழ்ந்துள்ள உயிரிழப்பு எண்ணிக்கை, கடந்த பல ஆண்டுகளில் ஈரானில் நடந்த வேறு எந்தவொரு போராட்டங்களின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளை விடவும் மிக அதிகமாகும் என தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.


இந்த உயிரிழப்புகளுக்கு பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூடு காரணமில்லை, பயங்கரவாதிகள் மற்றும் கலவரக்காரர்கள் நடத்திய வன்முறையே காரணம்' என கமேனி அரசு அவர்கள் மேல் பழி போட்டுள்ளது. ''போராட்டக்காரர்களை ஈரான் தூக்கிலிடத் தொடங்கினால், அமெரிக்கா மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.


ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும். உதவி வந்து கொண்டிருக்கிறது'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். இதனால் போரட்டம் மேலும் தீவிரம் அடையும். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement