அமெரிக்க பொருளாதாரம் செழித்து வளர்கிறது; அதிபர் டிரம்ப் தம்பட்டம்

23


வாஷிங்டன்: அமெரிக்க பொருளாதாரம் என் தலைமையின் கீழ் செழித்து வளர்கிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பு, அச்சுறுத்தல், திடீர் தாக்குதல் என தடாலடியான முடிவுகளையும், அறிவிப்புகளையும் வெளியிடக் கூடிய அமெரிக்க அதிபர் டிரம்ப், எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்பவர்.
தன்னால் தான் எதுவும் நடக்கிறது என்று கூறிக்கொள்வதில், அவருக்கு மிகவும் விருப்பம் அதிகம். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் தலைமையின் கீழ், பொருளாதாரம் செழித்து வளர்கிறது. உற்பத்தித் துறையில் ஒரு மறுமலர்ச்சியும், தனிநபர் வருமானத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வளர்ச்சியும், பல ஆண்டுகளாக காணப்படாத மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அதிகரிப்புக்கு பேருதவியாக இருக்கிறது. ஒரு பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறோம்.


நாம் இதுவரை கண்டிராத, வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக வணிக முதலீடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தனியார் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. அனைத்து புத்திசாலித்தனமான முதலீட்டாளர்களுக்கும் தெரியும். உலகின் மிகவும் செழிப்பான பொருளாதாரம் அமெரிக்காதான். முதலீடு செய்ய இதுவே சரியான நேரம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement