திமுக இந்த போகிப் பண்டிகையோடு அகற்றப்படணும்: அண்ணாமலை வலியுறுத்தல்

3

சென்னை: குடும்ப நலனுக்காக தமிழக வளங்களை சுரண்டிக்கொண்டிருக்கும் திமுக அரசு, இந்த போகிப் பண்டிகையோடு அகற்றப்பட வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


அவரது அறிக்கை: தமிழக மக்கள் அனைவருக்கும், தீயவற்றை அகற்றி, புதிய நம்பிக்கையை வரவேற்கும் திருநாளாம், இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டிய காலகட்டத்தில் தமிழ்நாடு இன்று நிற்கிறது. விவசாயத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாமல், ஒவ்வொரு மழைக்காலத்திலும் விவசாயிகள் தவிக்கின்றனர்.

இளைஞர்களின் அரசுப் பணி கனவுகள், திமுகவின் லஞ்ச லாவண்யத்தால் நீர்த்துப் போய்விட்டன. நம் சகோதரிகளுக்கு எங்கும் பாதுகாப்பில்லை. திமுகவின் கனிமவளக் கடத்தலுக்குத் துணை போகாத அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுகின்றனர். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வாழ்க்கையே போராட்டம் ஆகியிருக்கிறது. திமுகவின் ஊழல் ஆட்சியால், தமிழக மக்கள் வாழ்க்கை, சுமையாக மாற்றப்பட்டுள்ளது. ஊழலும், குடும்ப அரசியலும் பெருகி, யாருக்கும் பாதுகாப்பில்லாமல், இருண்ட நிலையில் தமிழகம் இன்று இருக்கிறது.



கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், குடும்ப நலனுக்காக தமிழக வளங்களை சுரண்டிக்கொண்டிருக்கும் திமுக அரசு, இந்த போகிப் பண்டிகையோடு அகற்றப்பட வேண்டும். வரும் தேர்தல், ஊழல் திமுக ஆட்சியை அரசியல் தீயில் கரைத்து, தமிழகத்திற்கு புதிய எதிர்காலத்தை உருவாக்கும் மற்றுமொரு போகிப் பண்டிகையாக நிச்சயம் மாறும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement