கல்லுாரி படிப்பை கைவிட்ட மகன் தாயுடன் சேர்ந்து ரூ.240 கோடி மோசடி

4

பெங்களூரு: பெங்களூரில் கல்லுாரி படிப்பை பாதியில் நிறுத்திய 22 வயது இளைஞர், தன் தாயுடன் இணைந்து 240 கோடி ரூபாய் சைபர் மோசடிக்கு துணை போன அதிர்ச்சி சம்பவம் போலீசாரால் கண்டறியப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் முகமது உசைப், 22; பி.காம்., படிப்பை பாதியில் நிறுத்தியவர். இவரது தாய் சபானா அப்துல் பாரி. தாயும், மகனும் இணைந்து அரசு மருத்துவமனைகள், கல்லுாரி போன்ற இடங்களுக்கு அடிக்கடி சென்று, மக்களை ஏமாற்றி வங்கிக் கணக்கு திறக்கச் செய்வதாக தெரியவந்தது.

போலீஸ் அவர்களை ரகசியமாக கண்காணித்தது. அவர்கள் பொது மக்களை அணுகி, 'வங்கிக் கணக்கு விபரங்களை தந்தால் 2,000 முதல் 5,000 ரூபாய் வரை கமிஷன் தருகிறோம்' என்று சொல்லி, பாஸ்புக், டெபிட் கார்டு, செக் புத்தகம், சிம் கார்டு ஆகியவற்றை சேகரிப்பதை பார்த்தனர்.

இதன் அடிப்படையில் அவர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள், சைபர் மோசடி குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் பணத்தை பரிவர்த்தனை செய்வதற்காக, 'மியூல்' கணக்குகள் எனப்படும், பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளை வழங்கி உதவியதாக ஒப்புக்கொண்டனர்.

டிஜிட்டல் கைது, முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என்ற பெயரில் மோசடி செய்யப்படும் தொகையை முகமது உசைப் மற்றும் அவரது தாய் பராமரிப்பில் இருந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி, அந்த பணத்தை துபாய்க்கு மாற்றி உள்ளனர்.

இதற்காக, துபாயைச் சேர்ந்த நபர், உசைபுக்கு ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். உசைப் வீட்டை போலீசார் சோதனையிட்டதில், 242 டெபிட் கார்டுகள், 58 மொபைல் போன்கள், காசோலை புத்தகங்கள், அரை கிலோ தங்க நகைகள், 5 லட்சம் ரூபாய் ஆகியவை சிக்கின.

பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் அளித்த பேட்டி:

பெங்களூரைச் சேர்ந்த உசைப் மற்றும் அவரது தாய் சபானா இருவரும், நாடு முழுதும் செயல்படும் சைபர் மோசடி கும்பலின் ஒரு அங்கம். இவர்கள், நாட்டில் நடந்த 864 சைபர் குற்ற வழக்குகளுடன் தொடர்புடையவர்கள்.

டில்லியைச் சேர்ந்த ஒன்பது இளைஞர்கள் இவர்களுக்கு உதவியுள்ளனர். அவர்களையும் டிசம்பர் 17ல் கைது செய்துள்ளோம். வாடிக்கையாளர் யார் என்பதை வங்கிகள் அறியும் கே.ஒய்.சி., செயல்முறை இல்லாத கணக்குகளை இவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

இந்த வங்கிக் கணக்குகளில் நடக்க இருந்த 240 கோடி ரூபாய் பரிவர்த்தனையை முடக்கி வைத்துள்ளோம். 24 கோடி ரூபாய் மட்டும் உசைப் மற்றும் அவரது தாய் சபானா நேரடியாக கையாண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதன்மை குற்றவாளி துபாயில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவரை கண்டறிந்து, நாடு கடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement