கடைசி பந்தில் டில்லி வெற்றி: லிசெல் லீ அரைசதம்

நவி மும்பை: கடைசி பந்தில் அசத்திய டில்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. லிசெல் லீ அரைசதம் விளாசினார்.

நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த பெண்கள் பிரிமியர் லீக் போட்டியில் ('டி-20') டில்லி, உ.பி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஜெமிமா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

உ.பி., அணிக்கு லிட்ச்பீல்ட் (27) ஆறுதல் தந்தார். கேப்டன் மெக் லானிங் (54), ஹர்லீன் தியோல் (47) கைகொடுத்தனர். உ.பி., அணி 20 ஓவரில், 154/8 ரன் எடுத்தது.
சுலப இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு ஷைபாலி வர்மா (36) நல்ல துவக்கம் தந்தார். லிசெல் லீ, 44 பந்தில் 67 ரன் விளாசினார். கேப்டன் ஜெமிமா (21) ஓரளவு கைகொடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. எக்லெஸ்டோன் வீசிய 20வது ஓவரின் முதல் 5 பந்தில் 5 ரன் கிடைத்தது. கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய லாரா வெற்றியை உறுதி செய்தார்.


டில்லி அணி 20 ஓவரில் 158/3 ரன் எடுத்து முதல் வெற்றி பெற்றது. லாரா (25), மரிஜான்னே (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூன்றாவது வீராங்கனை


உ.பி., அணியின் மேக் லானிங், தனது 4வது ரன்னை எட்டிய போது பிரிமியர் லீக் வரலாற்றில் 1000 ரன் எடுத்த 3வது வீராங்கனையானார். இதுவரை 30 போட்டியில், 1049* ரன் எடுத்துள்ளார். ஏற்கனவே நாட் சிவர்-புருன்ட் (1101 ரன், 31 போட்டி), ஹர்மன்பிரீத் கவுர் (1016 ரன், 30 போட்டி) இம்மைல்கல்லை எட்டினர்.

Advertisement