இந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம் * ராகுல் சதம் வீணானது

ராஜ்கோட்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் பவுலர்கள் கைவிட, இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. லோகேஷ் ராகுல் சதம் வீணானது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று குஜராத்தின் ராஜ்கோட்டில் நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பிரேஸ்வெல், பீல்டிங் தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்
இந்திய அணிக்கு சுப்மன் கில், 'சீனியர்' ரோகித் சர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. துவக்கத்தில் பந்துகள் நன்றாக 'சுவிங்' ஆக, முதல் 5 ஓவரில் இந்தியா 10 ரன் மட்டும் எடுத்தது. இதன் பின் இருவரும் 'டாப் கியருக்கு' மாறினர். பால்க்ஸ், ஜேமிசன் ஓவரில் ரோகித், தலா 2 பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 12 ஓவரில் 70 ரன் சேர்த்த போது, ரோகித் (24) கிளார்க் பந்தில் அவுட்டானார்.
சுப்மன் அரைசதம்
வந்த வேகத்தில் முதல் பந்தில் பவுண்டரி அடித்து, ரன் கணக்கைத் துவக்கினார் கோலி. மறுபக்கம் சுப்மன் 47 பந்தில் அரைசதம் கடந்தார். பின் முதல் போட்டியை போல, மீண்டும் 56 ரன் எடுத்த சுப்மன், ஜேமிசன் பந்தில் அவுட்டானார். இந்திய அணியின் ஸ்கோர் 17 ஓவரில் 100/2 ரன்களை எட்டியது.
திடீர் சரிவு
இந்நிலையில் 8 ரன் மட்டும் எடுத்த ஷ்ரேயஸ் ஐயர், 23 ரன் எடுத்த கோலி என இருவரும், கிளார்க் பந்தில் வீழ்ந்தனர். அடுத்து இணைந்த ஜடேஜா, ராகுல் என இருவரும், ஒன்றும், இரண்டுமாக ரன் எடுக்க, அணியின் ரன் வேகம் குறைந்தது. ஜடேஜா, 27 ரன்னில் வெளியேறினார்.
ராகுல் நம்பிக்கை
ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும், மனம் தளராமல் போராடினார் லோகேஷ் ராகுல். கிளார்க் பந்தில், ஒரு சிக்சர் அடித்த நிதிஷ் குமார், 20 ரன்னில் அவுட்டானார். ஹர்ஷித் ராணா (2) இம்முறை நிலைக்கவில்லை. ஜேமிசன் பந்தை சிக்சருக்கு விரட்டிய ராகுல், நியூசிலாந்துக்கு எதிராக 2வது, ஒருநாள் அரங்கில் 8வது சதம் (87 பந்து) கடந்தார்.
இந்திய அணி 50 ஓவரில் 284/7 ரன் எடுத்தது. ராகுல் (112), சிராஜ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்தின் கிளார்க், அதிகபட்சம் 3 விக்கெட் வீழ்த்தினார்.
மிட்செல் சதம்
நியூசிலாந்து அணிக்கு கான்வே, நிக்கோல்ஸ் ஜோடி துவக்கம் தந்தது. கான்வே 16 ரன் எடுத்த நிலையில், ஹர்ஷித் ராணா 'வேகத்தில்' போல்டானார். பிரசித் கிருஷ்ணா பந்தில் நிக்கோல்ஸ் (10) வீழ்ந்தார். இந்திய வீரர்களின் பீல்டிங் மோசமாக அமைந்தது. வில் யங் (87), டேரில் மிட்செல் ஜோடி, 3வது விக்கெட்டுக்கு 162 ரன் சேர்த்தது. இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர்.
தொடர்ந்து மிட்செல் சதம் அடிக்க, வெற்றி எளிதானது. நியூசிலாந்து அணி 47.3 ஓவரில் 286/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மிட்செல் (131), பிலிப்ஸ் (32) அவுட்டாகாமல் இருந்தனர். தொடர் 1-1 என சமனில் உள்ளது.

62 பந்து
இந்திய அணி நேற்று ஒரு கட்டத்தில் 16.4 ஓவரில் 99/1 ரன் எடுத்திருந்தது. எப்படியும் 350 க்கும் மேல் ஸ்கோர் செல்லும் என நம்பப்பட்டது. மாறாக அடுத்தடுத்த விக்கெட் சரிவால், ஸ்கோர் வேகம் குறைந்தது. அடுத்த 14 ஓவரில் 44/2 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. 16.4 வது ஓவருக்குப் பின், அடுத்த 62 பந்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை.

முதன் முறை

கடந்த ஆஸ்திரேலிய தொடரில் இருந்து கோலி பங்கேற்ற கடைசி 7 போட்டியில் தொடர்ந்து, குறைந்தது 50 ரன்னுக்கும் மேல் (74, 135, 102, 65, 131, 77, 93) எடுத்தார். நேற்று முதன் முறையாக 23 ரன்னில் அவுட்டானார்.

283 ரன்
கடந்த 2025 முதல் ஒருநாள் போட்டிகளில் 41 முதல் 50 ஓவர்களுக்கு இடையில் அதிக ரன் சேர்த்த வீரர்களில் இந்தியாவின் ராகுல் முதலிடத்தில் உள்ளார். இதுவரை இவர் 283 ரன் எடுத்துள்ளார். நியூசிலாந்தின் கிளன் பிலிப்ஸ் (244), இலங்கையின் லியனாகே (201) 2, 3வது இடத்தில் உள்ளனர்.

சச்சினை முந்தினார்
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் அரங்கில் அதிக ரன் எடுத்த வீரர் வரிசையில் சச்சினை (42ல் 1750 ரன்) முந்தி, முதலிடம் பிடித்தார் இந்தியாவின் கோலி. இவர், 35 போட்டியில் 1773 ரன் எடுத்துள்ளார். நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் (35ல் 1385), வில்லியம்சன் (31ல் 1239) 3, 4வது இடத்தில் உள்ளனர்.

புதிய கொண்டாட்டம்
ஒருநாள் அரங்கில் 8வது சதம் அடித்த ராகுல், தனது 9 மாத மகள் ஈவாராவுக்கு சமர்ப்பிக்கும் வகையில், கைவிரல்களை வாயில் வைத்து சைகை செய்தார்.

Advertisement