தாய்மொழி வழி கல்வி பயில்வோர் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து வருகிறது: தர்மேந்திர பிரதான்
சென்னை: ''தமிழகத்தில் தாய்மொழி வழி கல்வி பயில்வோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது,'' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
'துக்ளக்' வார இதழின், 56வது ஆண்டு விழா, சென்னை நாரத கான சபாவில் நேற்று மாலை நடந்தது. அதில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:
தமிழ் பழமையான சிறந்த, அழகான மொழி. இதைத்தான் போகுமிடமெல்லாம் பிரதமர் மோடி உரக்கப் பேசி வருகிறார். உதட்டளவில் அவர் இதை பேசவில்லை; உள்ளத்திலிருந்து பேசுகிறார். நாடு முழுதும் பொங்கல் பண்டிகைக்கென்று சிறப்பு உள்ளது. பொங்கல் பண்டிகை, மகர சங்கராந்தி, பிஹூ என்று, பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. நன்றி தெரிவிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஒட்டுமொத்த வளர்ச்சி
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை தனிச் சிறப்புடன் கொண்டாடுகின்றனர். இது, இந்திய கலாசாரத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. பெயர்கள், சடங்குகள் மாறுபடலாம்; ஆனால், உணர்வுகள் ஒன்றாகவே உள்ளன. பன்முகத்தன்மை பலம் மட்டுமல்ல; அது ஒரு நாளும் இந்தியாவை பலவீனப்படுத்தவில்லை. மாறாக, நாட்டையே செழுமைப்படுத்தியுள்ளது
'துக்ளக்' வார இதழை நிறுவிய சோ ராமசாமி, அழுத்தமான விஷயங்களைக்கூட நகைச்சுவையுடன் தன் விமர்சனத்தை ஆழமாக முன்வைத்தவர். யார் தவறு செய்தாலும், அதை துணிவுடன் சுட்டிக்காட்டியவர். அவரைப் போன்ற மனிதர்கள் பாராட்டுக்குரியோர்.
இந்திய மக்கள் தொகையில், தமிழகத்தின் பங்கு 6 சதவீதம். ஆனால், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில், 9 சதவீதம் பங்களிக்கிறது. வாகன உற்பத்தி, ஜவுளி, மின்னணு ஏற்றுமதியில், தமிழகம் முன்னணியில் உள்ளது.
சுகாதாரம், சமூக வளர்ச்சியில் வலுவான இடத்தில் இருக்கிறது. சிறப்பாக செயல்படும் தமிழகம், இந்தியாவின் பொருளாதாரத்தின் நுழைவு வாயிலாக உள்ளது. இந்தியாவின் பாரம்பரியத்தையும், உலக அளவிலான போட்டியை எதிர்கொள்ளும் திறனை வளர்க்கும் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு, மத்திய அரசால் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
அதில், தாய் மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று மொழி கல்வி கொள்கையை மத்திய அரசு ஆதரிக்கிறது. அக்கொள்கை, எந்த இந்திய மொழிக்கும் எதிரானது அல்ல. புதிய கல்விக் கொள்கை எதையும் திணிக்கவில்லை; கட்டாயப்படுத்தவில்லை. இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
இந்த நேரத்தில் ஒரு அதிர்ச்சி கலந்த உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும். தமிழகத்தில் தமிழ்வழி கல்வி குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு வலுவான தரவுகள் உள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில், தமிழ் வழி கல்வி படிப்போரின் எண்ணிக்கை, 32 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் உயர் கல்வி படிப்போரின் எண்ணிக்கை 4.46 கோடியை தாண்டியுள்ளது.
அதில், பெண்களின் எண்ணிக்கை 1.57 கோடியாக அதிகரித்துள்ளது. பட்டியலின, பழங்குடியினரில் உயர் கல்வி படிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் காரணமாக மத்திய அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும்தான் சொல்ல வேண்டும்.
இப்படி பல் துறைகளிலும் மத்திய அரசு, உலக அளவில் இந்தியாவை வளர்ச்சி அடைய வைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
படுதோல்வி
'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது: தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தனி கட்சி துவங்கி, பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு 20 முதல் 25 சதவீதத்திற்கும் மேல் ஓட்டு கிடைக்கும் என, பல கணிப்புகள் வந்தன. ஆனால், எதிர்பார்த்தது போலவே படுதோல்வி அடைந்தார்.
நடிகர் விஜய் கட்சிக்கு தொண்டர்கள் இல்லை. அது ஒரு கூட்டம். விஜய் கட்சியை சீரியஸாக நான் பார்க்கவில்லை. அக்கட்சியால், தமிழக அரசியலில் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ராம சீனிவாசன் பேசியதாவது: இந்தியாவில் பல மாநில கட்சிகள் உள்ளன. அந்த கட்சிகள் எதுவும் இந்தியாவை எதிர்ப்பதில்லை. ஹிந்து தெய்வங்களை பழிப்பதில்லை; அவதுாறாக விமர்சிப்பதில்லை. தி.மு.க., என்ற மாநில கட்சியே இந்திய எதிர்ப்பில் தான் உருவானது.
அக்கட்சியின் மரபணுவில் இந்திய எதிர்ப்பு உள்ளது. அதனால்தான் லோக்சபாவிலேயே தி.மு.க., - எம்.பி., ஒருவர், வட மாநிலங்களை மாட்டு மூத்திர மாநிலங்கள் என கொச்சைப்படுத்தி பேசினார். இப்படித்தான், தி.மு.க.,வில் இருக்கும் அனைத்து தலைவர்களின் எண்ணமும் உள்ளது. தொண்டர்களையும் அப்படித்தான், அக்கட்சி தலைமை வளர்த்தெடுத்துள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வருவது நாட்டுக்கு நல்லதல்ல என, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அன்றே கூறியுள்ளார். தேசியம், ஹிந்து மதம், கடவுளுக்கு எதிரான தி.மு.க., என்ற அசுரனை தேர்தல் களத்தில் வீழ்த்த, தமிழகத்தில் வலுவான கூட்டணி கட்டமைக்கப்பட வேண்டும்.
அதற்காகவே அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி அமைத்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., என்னும் அசுரனை வீழ்த்தியே தீருவோம். அதற்காக, ஹிந்துவாக வாழ்வோம்; ஹிந்துவாக ஓட்டளிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய கூட்டணி
தமிழக காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுசாமி பேசியதாவது: தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின், புதிய கூட்டணி அமைத்து, ஆட்சியைப் பிடித்த வரலாறெல்லாம் தமிழகத்தில் தான் நடந்துள்ளது. இன்றுள்ள கூட்டணி அப்படியே இருக்குமா எனத் தெரியாது. எந்த நேரத்திலும் எந்த மாற்றமும் அரசியலிலும், தேர்தல் கூட்டணிகளிலும் நடக்கலாம்.
காங்கிரசுக்கு யார் ஐந்து அல்லது ஆறு அமை ச்சர்கள் பதவி தருகின்றனரோ, அவர்கள் தான் ஆட் சி அமைக்க முடியும். இல்லையெனில், அவர்கள் எதிர்க்கட்சி தான். பா.ஜ.,வுடன் மட்டுமே காங்கிரசால் கூட்டணி வைக்க முடியாது; மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
எல்லிரும் இந்தில படிச்சு பி.ஹெச்.டி வாங்கி வடக்கே பெரிய பெரிய வேலைக்கு போயிட்டாங்க. அங்கே இருக்கிறவன் படிக்காம இங்கே பஞ்சம் பொழைக்க வந்துட்டான். தமிழ் படிக்க ஆளே இல்லை.
எங்களுக்கு துண்டு சீட்டு வாசிக்க தெரிந்தால் போதும்....அனைத்து தமிழ் தேர்வில் தோல்வியும் அடைவோம்... ஏன் என்றால் தமிழ் எங்கள் மூச்சு... ஹி.. ஹி...