தலைமைச் செயலகத்தில் பொங்கல் விழா

6

சென்னை: 'கேட்டரிங்' நிறுவனத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட பொங்கலை பானையில் கொட்டி, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது, தலைமைச் செயலக ஊழியர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், கடந்த நான்கரை ஆண்டுகளாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்தன. ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரசு ஊழியர்களை திருப்திபடுத்தும் வகையில், புதிதாக ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட சலுகைகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது.


இந்நிலையில், சென்னை தலைமைச்செயலக வளாகத்தில், அரசு சார்பில் நேற்று நடந்த பொங்கல் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அரசு ஊழியர்களுடன் இணைந்து, முதல்வர் பொங்கல் விழாவைக் கொண்டாடினார்.


இதற்காக, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள ராணுவ மைதானத்தில், அலங்கார பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேடைக்கு முன், நான்கு பொங்கல் பானைகள் வைக்கப்பட்டிருந்தன.


முதல்வர் வருவதற்கு முன், நெருப்பு வைத்து, பானையை கரி படிய வைத்தனர். அதன்பின் கேட்டரிங் நிறுவனத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட சர்க்கரை பொங்கலை, நான்கு பானைகளிலும் நிரப்பினர்.


முதல்வர் வந்ததும், அவரும், துணை முதல்வரும், பானையில் இருந்த பொங்கலை, கரண்டியில் எடுத்து, அங்கிருந்தவர்களுக்கு வினியோகம் செய்தனர்.


பொங்கல் விழாவில், பொங்கல் வைக்காமல், கேட்டரிங் நிறுவனத்தில் தயார் செய்த பொங்கலை, பானையில் வைத்து வழங்கியது, தலைமைச் செயலக ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement