'அம்ரித் பாரத்' பணி சரியில்லை: கோட்ட மேலாளர் அதிருப்தி

காரைக்குடி: காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில், 'அம்ரித் பாரத்' திட்டத்தில், 13 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு செய்த மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, பணிகள் சரிவரை நடைபெறவில்லை என, அதிருப்தி தெரிவித்தார்.

தமிழகத்தின் காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 13.57 கோடி ரூபாயில், 2023ல் புதுப்பிப்பு பணிகள் துவங்கின.

மின்துாக்கி, வாகன நிறுத்தம், அலங்கார விளக்குகள், நுழைவு வாயிலில் அலங்கார வளைவு, குளிர்சாதன வசதி கொண்ட பயணியர் ஓய்வறை மற்றும் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்தன. பிரதமர் மோடி, காரைக்குடி உள்ளிட்ட பல ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த வசதிகளை துவக்கி வைக்க உள்ளார்.

இதையொட்டி, நேற்று காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நடந்த பணிகளை, மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார். அப்போது, நடைமேடை தளம் தரமாக இல்லை; பயணியர் அமரும் இடத்தில் பொருத்திய மின்விசிறி சுவிட்ச்கள் உயரத்திலும், தானியங்கி டிக்கெட் வழங்கும் மிஷின்களுக்கு வரும் மின்ஒயர்கள், பாதுகாப்பற்ற முறையிலும் இருந்தன.

கடந்த முறை ஆய்வு செய்தபோது, சரிசெய்ய கூறப்பட்ட பணிகள் அனைத்தும், இதுவரை சரி செய்யப்படவில்லை எனக்கூறி, அதிருப்தியடைந்த ஓம் பிரகாஷ் மீனா, அதிகாரிகளை கண்டித்தார்.

Advertisement