காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ரூ.13 கோடியில் நடந்த பணிகள்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் அம்ரூத் பாரத் திட்டத்தில் ரூ.13 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு செய்த மதுரை கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா அதிருப்தி தெரிவித்தார்.

நாட்டில் 1,200 க்கும் மேற்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் நடந்தது.

காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இத்திட்டத்தின் கீழ் ரூ.13.57 கோடியில் 2023 ல் புதுப்பிப்பு பணிகள் துவங்கின.

லிப்ட், வாகன நிறுத்தம், அலங்கார விளக்குகள், நுழைவு வாயிலில் ஆர்ச், பயணிகள் ஏசி ஓய்வு அறை, டிஜிட்டல் போர்டுகள், சி.சி.டிவி., கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்தன.

பிரதமர் மோடி காரைக்குடி உள்ளிட்ட பல ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த வசதிகளையும் துவக்கி வைக்க உள்ளார்.

இதையொட்டி நேற்று காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நடந்த பணிகளை மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார்.

அப்போது நடைமேடை தளம் தரமாக இல்லை. பயணிகள் அமரும் இடத்தில் பொருத்திய மின்விசிறி சுவிட்ச்கள் உயரத்தில் இருந்தது.

தானியங்கி டிக்கெட் வழங்கும் மெஷின்களுக்கு வரும் மின்ஒயர்கள் பாதுகாப்பற்ற முறையில் இருந்தன.

கடந்த முறை ஆய்வு செய்த போது சரி செய்ய கூறப்பட்ட பணிகள் அனைத்தும் சரி செய்யப்படவில்லை எனக்கூறி அதிருப்தி அடைந்த கோட்ட மேலாளர் அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

சென்னைக்கு பகல் நேர ரயில் பின் கோட்ட மேலாளர் கூறியதாவது: கடந்த முறை வந்த போது தெரிவித்த பிரச்னைகளில் பெரும்பாலானவற்றை சரி செய்து விட்டனர். ஸ்டேஷன் திறப்புவிழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. மழை நீர் செல்ல கால்வாய் கட்டியுள்ளோம்.

அதில் பிரச்னை இருந்தால் மாற்றி கட்டப்படும். காரைக்குடி - - சென்னைக்கு பகல் நேர கூடுதல் ரயில் கேட்டுள்ளனர்.

முதியவர்களுக்கு பேட்டரி கார் கூடுதலாக தேவைப்பட்டால் வழங்கப்படும். நுழைவு வாயில் அருகேயும் லிப்ட் வசதி செய்ய தேவை இருந்தால் செய்து கொடுக்கப்படும் என்றார்.

Advertisement