கூட்டணியை அழைக்காமல் பிரதமர் பொதுக்கூட்ட இடத்தில் பூஜை; பா.ஜ., அதிருப்தி

7

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள பகுதியில், பா.ஜ., நிர்வாகிகள் வரும் முன்பே, அ.தி.மு.க.,வினர் பூமி பூஜை நடத்தியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


தமிழக சட்டசபை தேர்தல், வரும் ஏப்ரலில் நடக்க உள்ளது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இக்கூட்டணி சார்பில், வரும் 23ம் தேதி, மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதனால், மிகப் பிரமாண்டமாக பொதுக்கூட்டத்தை நடத்த அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வினர் முடிவெடுத்துள்ளனர்.

உரசல்



இதையடுத்து, மதுராந்தகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில், அ.தி.மு.க., சார்பில் பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பூமிபூஜை தொடர்பாக, பா.ஜ.,வினருக்கு முன்கூட்டியே அ.தி.மு.க., தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பா.ஜ., நிர்வாகிகள், பூமிபூஜைக்கு தாமதமாக வந்தனர். அதற்கு முன்பாகவே, திட்டமிட்ட நேரத்தில் அ.தி.மு.க.,வினர் பூமி பூஜையை முடித்து விட்டனர். இதனால், அ.தி.மு.க., - பா.ஜ., நிர்வாகிகள் இடையே லேசான உரசல் ஏற்பட்டுள்ளது.


இது குறித்து, செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.,வினர் கூறியதாவது:
பிரதமர் மோடி கலந்து கொள்ளக்கூடிய பொதுக்கூட்டத்துக்கான இடத்தை தேர்வு செய்த பின், அந்த இடத்தில் பூமிபூஜை நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 9:00 மணிக்கு பூஜை நடத்தப் போவதாகவும், உரிய நேரத்தில் கலந்து கொள்ளுமாறும் அ.தி.மு.க., தரப்பில் இருந்து பா.ஜ.,வினருக்கு தகவல் சொல்லப்பட்டது.

வருத்தம்



உரிய நேரத்துக்கு முன், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அந்த இடத்தில் கூடி விட்டனர். பா.ஜ., மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகன் உள்ளிட்டோர் வர தாமதாகும் என சொல்லப்பட்டதால், அவர்கள் வருகைக்காக பா.ஜ.,வினர் காத்திருந்ததில், பூமிபூஜை நடந்த இடத்துக்கு செல்வதில் தாமதமாகி விட்டது. அதனால், அ.தி.மு.க.,வினர் குறிப்பிட்ட நேரத்தில் பூமிபூஜையை முடித்துவிட்டனர்.


அதில், பா.ஜ., தரப்பில் செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் பிரவீன் குமார் மட்டும் கலந்து கொண்டார். கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் கலந்து கொள்ளவிருந்த சூழலில், அ.தி.மு.க., தரப்பு முன்கூட்டியே பூமி பூஜை நடத்தியது சற்று வருத்தம் தான். இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது நிருபர் -

Advertisement