கேரளாவில் உறுப்பு மாற்று ஆப்பரேஷன் பயணியர் விமானத்தில் பறந்தது சிறுநீரகம்

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக முதல்முறையாக சிறுநீரகம் கண்ணுாரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பயணியர் விமானத்தில் எடுத்து செல்லப்பட்டு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தில் உள்ள பைய்யாவூரை சேர்ந்த பள்ளி மாணவி அயோனா மோன்சன், 17. பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததில் அவரது தலை மற்றும் நுரையீரலில் பலத்த காயம் ஏற்பட்டது.

கண்ணுார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோன்சன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். அவரது ஒரு சிறுநீரகத்தை திருவனந்தபுரத்தில் உள்ள பரசாலையைச் சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

நிபுணர்கள் முடிவு இதற்கான ஏற்பாடுகளை மாநிலத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்பார்வையிடும் கேரள மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பு மேற்கொண்டது.

வழக்கமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உடல் உறுப்புகள் கடற்படை விமானம், அரசால் வாடகைக்கு அமர்த்தப்படும் ஹெலிகாப்டர் அல்லது சாலை மார்க்கமாக வாகனங்களில் எடுத்து செல்லப்படும்.

இந்நிலையில் மாணவியின் சிறுநீரகத்தை குறித்த நேரத்தில் திருவனந்தபுரத்துக்கு எடுத்து செல்வதில் ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப பிரச்னை இருந்தது.

இதனால் முதல் முறையாக பயணியர் விமானத்தை பயன்படுத்த மருத்துவ நிபுணர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக, 'இண்டிகோ' விமானத்தில் கண்ணுார் மருத்துவக் கல்லுாரி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் நமீதா ஒரு சிறுநீரகத்தை கொண்டு செல்ல முன்வந்தார்.

கண்ணுார் ஆஸ்தர் எம்.ஐ.எம்.எஸ்., மருத்துவமனையில் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு துவங்கி நடந்த உறுப்பு அகற்றும் பணி காலை 5:00 மணிக்கு முடிந்தது. இதையடுத்து காலை 6:00 மணிக்கு கண்ணுார் விமான நிலையத்திற்கு சிறுநீரகம் எடுத்து செல்லப்பட்டது.

முதல்முறை விமானத்தில் பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்ட சிறுநீரகம், காலை 10:45 மணிக்கு திருவனந்தபுரத்தை அடைந்தது. அங்கிருந்து ஆம்புலன்சில் மருத்துவக் கல்லுாரிக்கு எடுத்து செல்லப்பட்டு அந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டது.

மற்றொரு சிறுநீரகம், கல்லீரல், கருவிழிகள் ஆகியவை கோழிக்கோட்டில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு எடுத்து செல்லப்பட்டது.

கேரளாவில், பயணியர் விமானத்தில் உடல் உறுப்பு எடுத்து செல்லப்பட்டது இதுவே முதல்முறை.

Advertisement