நெற்குப்பை பாரம்பரிய வீட்டில் பொங்கல் விழா; 27 குடும்பங்கள் பங்கேற்பு

1

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே நெற்குப்பையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரிய பூர்வீக வீட்டை ராம.சா.ராமநாதன் செட்டியார் - -உண்ணாமலை ஆச்சி குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். குடும்ப விழாக்களை இங்கு கொண்டாடி வருகின்றனர். பொங்கல் விழாவில் அதிகமானோர் பங்கேற்கின்றனர்.


இந்த ஆண்டு 27 குடும்பங்களைச்சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் கொண்டாடினர். இதற்காக அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும், ஹரியானா, மும்பை, பெங்களூர், கோவை, திருச்சி, சென்னை நகரங்களில் இருந்தும் 3 நாட்களுக்கு முன் இங்கு வந்திருந்தனர்.


முதல் நாளில் நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன், கொல்லங்குடி வெட்டுடையார் காளியை வழிபட்டனர். தை பொங்கலான நேற்று பாரம்பரிய வீட்டில் அனைவரும் ஒரே வண்ணத்தில் வேட்டி, சட்டை, சேலை அணிந்து கூடினர். வீட்டு முற்றத்தில் வண்ண கோலமிட்டு, சூரியக் கதிர்கள் இறங்குமிடத்தில் பெண்கள் விறகு அடுப்பில், பச்சரிசி மாவு கோலமிட்ட பானைகளை வைத்தனர்.


தொடர்ந்து வயல்களில் அறுவடை மூலம் வந்த அரிசியை பானையிலிட்டு பொங்கலிட்டனர். பால் பொங்குகையில் மங்களகரமாக சங்கு முழங்க, குலவையிட்டு, மற்றவர்கள் பொங்கலோ பொங்கல் என்று சூரியபகவானை வழிபட்டனர்.


பின்னர் மூத்தோரிடம் ஆசி பெற்றும், பாரம்பரிய விளையாட்டுக்களான கயிறு இழுத்தல், பாண்டியாடுதல், தாயம்,பல்லாங்குழி விளையாடி மகிழ்ந்தனர்.


கோவை ஏ.ஆர். லட்சுமணன் செட்டியார், சென்னை கேஆர்.என்.சாத்தப்பன் செட்டியார் கூறியதாவது:

உழவர்களுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் பொங்கலை சொந்த ஊரில், பாரம்பரிய வீட்டில் கொண்டாட 9 ஆண்டுகளுக்கு முன் முடிவெடுத்தோம். அது உற்சாகமான, எங்களை புதுப்பிக்கும் அனுபவத்தை ஆண்டு தோறும் தருகிறது என்றனர்.

Advertisement