அரசியல் நாகரிகம் தெரியாதா?

1

'வெளிநாட்டில் இருந்து வந்த தலைவரை இப்படியா அவமதிப்பது...' என, கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவை பார்த்து கொந்தளிக்கின்றனர், இங்குள்ள பா.ஜ.,வினர்.

ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், இரண்டு நாள் பயணமாக சமீபத்தில் நம் நாட்டுக்கு வந்திருந்தார். தன் பயணத்தின் இரண்டாவது நாள், கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு வந்தார்.

வழக்கமாக, வெளிநாட்டு தலைவர்கள் நம் நாட்டின் ஏதாவது ஒரு மாநிலத்துக்கு வந்தால், அவரை, அந்த மாநில முதல்வர் வரவேற்க வேண்டும் என்பது மரபு.

ஆனால், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடகாவுக்கு வந்த ஜெர்மனி பிரதமரை, அந்த மாநில முதல்வர் சித்தராமையாவோ, துணை முதல்வர் சிவகுமாரோ வரவேற்க வரவில்லை.

அதே நேரத்தில், மைசூருக்கு வந்த ராகுலை வரவேற்பதற்காக, சித்தராமையாவும், சிவகுமாரும் அங்கு போய் விட்டனர். இத்தனைக்கும் ராகுல், கர்நாடகாவில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

தமிழகத்தின் ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மைசூருக்கு விமானத்தில் வந்த ராகுல், அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஊட்டிக்கு சென்றார். அவரை வரவேற்பதற்காக, ஜெர்மனி பிரதமரை , முதல்வரும், துணை முதல்வரும் புறக்கணித்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

'உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் பிரதமரை வரவேற்காமல் தவிர்த்து, கர்நாடகாவின் நலன்களை காங்கிரஸ் புறக்கணித்து உள்ளது. முதல்வருக்கு அரசியல் நாகரிகமே தெரியவில்லை...' என, கர்நாடக மாநில பா.ஜ., தலைவர்கள் புலம்புகின்றனர்.

Advertisement