ஆரோக்கியமான இந்தியாவால் தான் வல்லரசு உருவாகும்! துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்

1

கோவை: ''ஆரோக்கியமான மனிதன் நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறான்; ஆரோக்கியமான இந்தியா உருவாகாமல் வல்லரசு இந்தியா உருவாகாது,'' என, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.


கோவை, கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் புதிய நரம்பியல் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு கட்டடத்தையும், மருத்துவ கல்லுாரியில் முதுகலை பட்டப்படிப்பு பிரிவுகளையும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று துவக்கிவைத்தார்.


பின்னர், அவர் பேசியதாவது: முதுநிலை பட்ட படிப்பு பிரிவுகள் துவங்க,ஒரு பைசா கூட செலவு செய்யாமல் அனுமதி பெற்றுள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இதற்கு காரணம் மோடி ஆட்சியில், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான்.


தமிழகத்துக்கு ஒரே ஆண்டில், 11 மருத்துவ கல்லுாரிகளை பழனிசாமி முதல்வராக இருந்த சமயத்தில்கொடுத்தவர் மோடி. உலக மக்கள் தொகையில் நரம்பியல் குறைபாடுகள், 40 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை உள்ளது.


எதிர்காலத்திலும் இந்த பாதிப்பு அதிகம் வராமல் இருக்க கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நம் நாட்டில் 140 கோடி மக்கள் இருக்கும் நிலையில் எல்லோருக்கும் தேவையான சமயத்தில் மருத்துவம் கிடைக்க வேண்டும்.அதற்கு அரசு மருத்துவ மனைகளும், தனியார் மருத்துவமனைகளும் வேண்டும்.

Latest Tamil News

மருத்துவ பாதுகாப்பு



ஏழைகள் நலனில் தணியாத அக்கறை கொண்டவர் மோடி. கடந்த, 2014ம் ஆண்டுக்கு முன்பு நாட்டின் சுகாதார பட்ஜெட் ரூ.37 ஆயிரம் கோடியாக இருந்தது. இது, 2025-26ல் ரூ.98 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. 'ஆயுஷ்மான் பாரத் திட்டம்'தான் உலகில் மிகப்பெரிய அரசு நிதியுதவி சுகாதார திட்டமாக இருக்கிறது.


இது, 50 கோடி இந்தியர்களுக்கு இலவச மருத்துவ பாதுகாப்பை வழங்குகிறது.ரூ.1.50 லட்சம் கோடி மருத்துவ செலவை ஏழை மக்களின் தோள்களில் இருந்து மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.நாட்டில் 1.6 லட்சத்துக்கும் அதிமான சுகாதார நலவாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


டாக்டர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. கடந்த, 2014ல் நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 51 ஆயிரம் இடங்கள் மட்டுமே இருந்தன. இன்று, 1.2 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் என இரு மடங்கு உயர்த்தி ஏழை, எளிய மாணவர்களும் படிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


கடந்த, 2014க்கு முன்பு எம்.பி.பி.எஸ்., முதுகலை படிப்புக்கு, 31 ஆயிரம் இடங்கள் மட்டுமே இருந்தன;இன்று, 70 ஆயிரத்துக்கும் அதிகமாகஉள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 300க்கும் அதிகமான புதிய மருத்துவ கல்லுாரிகள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன.


மாவட்டம் தோறும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவ கல்லுாரி என்ற திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான மனிதன் நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறான். ஆரோக்கியமான இந்தியா உருவாகாமல் வல்லரசு இந்தியா உருவாகாது. விஞ்ஞானப்பூர்வ முன்னேற்றங்களை இங்கு கொண்டுவரவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


கே.எம்.சி.எச்., நிறுவன தலைவர் நல்லா பழனிசாமி, செயல் இயக்குனர் அருண், இயக்குனர் பூரணி, டீன் ரவிக்குமார், சக்தி குழும தலைவர் மாணிக்கம், சங்கர் அசோசியேட்ஸ் நிறுவன தலைவர் ரமணி சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


@block_Y@

செலவில்லாமல் அனுமதி: மோடி அரசுக்கு பாராட்டு



கே.எம்.சி.எச்., நிறுவன தலைவர் நல்லா பழனிசாமி பேசியதாவது: ஒரு மேன்மையான குடும்பத்தில் பிறந்து, ஆர் எஸ்.எஸ்., அமைப்பில் அங்கம் வகித்தும், பா.ஜ.. வில் முக்கிய பதவிகள் வகித்தும், பொதுப்பணிகளில் ஈடுபட்டும், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா மாநிலங்கனின் கவர்னராக இருந்தும் தற்போது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் வந்திருப்பது, நமக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை.

கடந்த, 2019ல் மருத்துவ கல்லூரி ஆரம்பித்தோம். நாங்கள் டில்லிக்கு மருத்துவ கல்லுாரி அனுமதிபெற சென்றோம். ஒரு செலவும் இல்லாமல், பிரதமர் மோடி எங்களுக்கு மருத்துவ கல்லுாரிக்கு அனுமதி தந்துவிட்டார். மோடி அரசை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.

இப்போது, முதுகலை படிப்பு படப்பிரிவுகள் துவங்க உள்ளோம். புதிய கட்டடத்தில் நரம்பியல் சார்ந்த குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளோம், புதுப்புது ஆப்பரேஷன் தியேட்டர், ஐ.சி.யூ., கொண்டுவத்துள்ளோம். இவ்வாறு, அவர் பேசினார்.block_Y

Advertisement