சின்னசேலத்தை நகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை! சிறப்பு நிலை பேரூராட்சி அந்தஸ்தால் நிதி பற்றாக்குறை

கள்ளக்குறிச்சி: நகராட்சிக்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ள சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சியை தரம் உயர்த்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 2019 ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டம் 9 ஊராட்சி ஒன்றியங்கள், 3 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளை கொண்டுள்ளது. இதில் சின்னசேலம் பேரூராட்சி சங்கராபுரம் சட்டசபை தொகுதி, சின்னசேலம் தாலுகாவை உள்ளடக்கியுள்ளது.

கடந்த 1981ம் ஆண்டு முதல் பேரூராட்சியாக உதயமாகி முதல் நிலை, தேர்வு நிலை என படிப்படியாக தரம் உயர்ந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் சிறப்பு நிலை பேரூராட்சி அந்தஸ்துடன் செயல்பட்டு வருகிறது.

பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இங்குள்ள 9 ஆயிரம் குடியிருப்புகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக தினமும் சின்னசேலம் வந்து செல்கின்றனர். தற்போது பேரூராட்சி சேர்மனாக காங்., கட்சி சேர்ந்த லாவண்யா ஜெய்கணேஷ், துணை சேர்மனாக அ.தி.மு.க., ராகேஷ் ஆகியோர் உள்ளனர்.

மாவட்டத்தில் சின்னசேலம் பேரூராட்சி மிக வேகமாக வளர்ந்து வரும் வணிக நகரமாகும். இங்கு தாலுகா அலுவலகம், நீதிமன்றம், அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள், அரசு தொழிற்பயிற்சி நிலையம், துணை மின் நிலையம், தீயணைப்பு நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், போக்குவரத்து பணிமனை, ஆவின் பால் குளிரூட்டும் நிலையம், கால்நடை மருத்துவமனை, மார்க்கெட் கமிட்டி, சார்பதிவாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், கூட்டுறவு வங்கி, அஞ்சல் அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட பல்வேறு அலுவலங்கள் உள்ளது. தனியார் மருத்துவமனையும் அதிகளவில் உள்ளன.

குறிப்பாக மாவட்டத்தில் சின்னசேலம் பேரூராட்சியில் மட்டுமே ரயில் நிலையம் அமைந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து விவசாயத்திற்கான உரங்கள், ரேஷன் அரிசிகள் ரயில்களில் டன் கணக்கில் கொண்டு வரப்பட்டு, வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இங்குள்ள 50க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் மூலம் பல ஆயிரம் டன் அரிசி வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டு வருகின்றன.

கடலுார் மண்டலத்தில் பெரிய பேரூராட்சியாக விளங்கும் சின்னசேலம் பேரூராட்சி ஆண்டு வரி வருவாய் 2 கோடிக்கு மேல் உள்ளது. இப்பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சியினர், வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

மக்கள் தொகை அதிகளவு கொண்டுள்ள நிலையில், பேரூராட்சியாக இருப்பதால் போதிய நிதியின்றி கழிவு நீர் கால்வாய், குடிநீர், சாலைகள் போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் முறையான கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாமல் போகிறது. நகராட்சியாக தரம் உயர்த்தினால், மக்கள் தொகைக்கேற்ப போதிய அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ள முடியும்.

சின்னசேலம் பல ஆண்டுகளாக பேரூராட்சியாகவே இருப்பதால், அப்பகுதி வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. நகராட்சியாக தரம் உயர்ந்தால், தொழில் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிக்கு வழிவகைகள் ஏற்படும்.

இதற்கிடையே வரும் சட்டசபை கூட்டத் தொடரில் சின்னசேலம் பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பு செய்யப்படும் என்பது அப்பகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இல்லையெனில் அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் கூறியதாவது;

சின்னசேலம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் பல ஆண்டுகள் கோரிக்கையாக உள்ளது.

இதனையொட்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம், மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, எம்.எல்.ஏ., உதயசூரியன் ஆகியோர்களின் வழியாக மனுக்கள் அளித்துள்ளோம்.

சின்னசேலம் பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று நம்புகிறோம் என்றார்.

Advertisement