ஓய்வூதியம் இல்லாமல் அவதிப்படும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்கள்

மதுரை: ''நகரக் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு இதுவரை ஓய்வூதியம் வழங்கவில்லை. இதனால் பணிஓய்வு பெற்ற மறுமாதமே வறுமை நிலைக்குச் செல்வதாக தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவிக்கிறது.

சங்க பொதுச் செயலாளர் சர்வேஸ்வரன் கூறியதாவது: கூட்டுறவுத் துறையின் கீழ் 127 நகர கூட்டுறவு வங்கிகளில் 1500 பேர் பணியில் உள்ளனர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை வெளியிடப்படவில்லை.

தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக கூட்டுறவுத்துறை பதிவாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஏற்புடையதாக இல்லை. கேரளம், மேற்கு வங்கம், ஆந்திராவில் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பென்ஷன் திட்டம் இன்னும் கனவாகவே உள்ளது.

தமிழகத்தில் உள்ள 24 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் பென்ஷன் நிதியம் 15 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வங்கியின் லாபத்தில் இருந்து 10 சதவீதத்தொகை இந்த நிதியத்திற்கு ஒதுக்கப்படும். இத்தொகையை முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டியில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு மாதம் ரூ.5500 கருணை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதுவரை பென்ஷன் நிதியத்தொகை ரூ.443 கோடிக்கு மேல் சேர்ந்துள்ளதால் கருணை ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும்.

நகரக் கூட்டுறவு வங்கிகளிலும் பென்ஷன் நிதியம் உருவாக்கி நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றார்.

Advertisement