இயற்கையோடு இணையும் இளம் விவசாயிகள் மணப்பாறையில் விவசாய புரட்சி

மதுரை: நாட்டுப்புறக்கலைகள் மூலம் விவசாயத்தையும் விவசாயம் வழியாக கலையையும் ஒருசேர வளர்க்கின்றனர் திருச்சி மணப்பாறை தளிர் அமைப்பு இளைஞர்கள்.

ஆசிரியராக இருந்து கொண்டே இயற்கை விவசாயப் பணியையும் பார்த்து வரும் மணப்பாறை வலையப்பட்டி தளிர் இயற்கை விவசாயக் குழுத் தலைவர் பொன் அழகேந்திர ராஜா, நாட்டுப்புறக்கலைகள் வழியாக 100 இளம் விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு ஒருங்கிணைத்தது குறித்து கூறியதாவது:

அப்பாவின் 13 ஏக்கர் நிலத்தில் பூங்கார் நெல் ரகம் பயிரிட்டோம். மாணவர்களுக்கு டியூசன் எடுத்தபோது பூங்கார் அரிசியில் புட்டு செய்து கொடுத்து பாரம்பரிய அரிசியின் மகத்துவத்தை விளக்கினேன். இயற்கை விவசாயத்தை மக்களிடம் சேர்க்க நண்பர்கள் சேர்ந்து கலைக்குழுவை உருவாக்கினோம். தப்பாட்டம் ஆடி பொதுவெளியில் அனைவரையும் ஒருங்கிணைத்து பாட்டுப்பாடி, நடனமாடி இயற்கை விவசாயத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

இயற்கையாக விவசாயம் செய்யும் பொருட்களை விற்க உணவகம் நடத்தும் ஐடியா கிடைத்தது. அடுத்து காய்கறிகளை விற்க நினைத்தோம். இதற்காக இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைக்க முடிவு செய்தோம். இரண்டாண்டு முயற்சியில் 100 இளம் விவசாயிகளை இணைத்தோம்.

அவர்கள் விளைவிக்கும் பொருட்களை நாங்களே எடுத்துக் கொண்டு விற்பனை செய்கிறோம். மதிப்புக்கூட்டி விற்கிறோம். முதலில் மானாவாரி ரகங்களைத் தேர்ந்தெடுத்தோம். அந்த விவசாயிகளை பார்த்து மற்ற விவசாயிகளும் இயற்கை சாகுபடிக்கு மாறினர்.

இந்த முறை 36 விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்கின்றனர். இதுபோக 30 பாரம்பரிய ரக நெல்லை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம். அதில் விளையவைக்கும் நெல்லை நாங்களே வாங்கி விற்கிறோம். மொத்தமாக 52 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து வருகிறோம்.

கருப்பு கவுனி, சீரகசம்பா, பூங்கார், மாப்பிள்ளை சம்பா, கிச்சடி சம்பா நெல், அரிசி ரகங்கள், கம்பு, சோளம், கேழ்வரகு, உளுந்து, கொள்ளு, தட்டைபயறு, காய்கறிகளை விற்கிறோம். இளம் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளோம். அவர்களுக்கு ஓராண்டு வரை சாகுபடிக்கான விதைகளை இலவசமாக தருகிறோம்.

கலைகள் தரும் உற்சாகம் எங்கள் குழுவில் உள்ள நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் கச்சேரி செய்கிறோம். வள்ளித்திருமணம், மதுரை பாண்டிசாமி வரலாறு, திருச்சியில் நாயன்மார் கோயில் வரலாறு போன்ற உள்ளூர் சுவாமிகளின் வரலாறுகளையும் பொன்னர் சங்கர் வரலாறுகளையும் நாடகமாக விவசாயத்தோடு தொடர்புபடுத்தி நடித்துக் காட்டுகிறோம். 21 பேர் கொண்ட தளிர் கலைக்குழுத் தலைவராக முத்துகிருஷ்ணன் ஒருங்கிணைக்கிறார். என்னுடன் முத்துகிருஷ்ணன், முத்துப்பாண்டி, ஜீவிதாரணி, சாய் ஸ்ரீ, சினேகா, பாண்டித்துரை, பிரகாஷ், அனுசுயா, கதிர்வேல் ஆகியோரும் இயற்கை விவசாய குழுவுக்கு உறுதுணையாக நிற்கின்றனர். நான், பாண்டித்துரை, முத்துகிருஷ்ணன் மூவரும் இயற்கை சாகுபடி பயிற்சி அளிக்கிறோம்.

இயற்கை விவசாயத்திற்காக சுவிட்சர்லாந்தில் ஒரு கருத்தரங்கில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் கலைக்குழுவில் உள்ள 21 பேருமே நேபாளத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடங்கிய கலைக்குழுவால் தற்போது கலைநிகழ்ச்சிகளையும் இயற்கை விவசாயத்தையும் ஒருசேர பார்த்துக் கொள்கிறோம் என்றார்.

இவரிடம் பேச: 84896 56514.

Advertisement