பட்டியலிடப்படாத நிறுவனங்கள் கட்டுப்படுத்த செபி ஆலோசனை

பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஆகாத நிறுவனங்களை முறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக, செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படாமல் பல லட்சம் நிறுவனங்கள் உள்ளன. ஆனால், சந்தையில் பரபரப்பாக பேசப்படும் பெரிய நிறுவனங்கள் சில நுாறு மட்டுமே உள்ளன.

இந்நிலையில், பட்டியலிடப்படாத நிறுவனங்கள் தங்களின் நிதிநிலை மற்றும் வணிக அபாயங்கள் குறித்த தகவல்களை, பொதுமக்களுக்கு துல்லியமாக தெரிவிப்பதில்லை.

இதனால், முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க செபி விரும்புகிறது.

எனவே, தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத, பட்டியலிடப்படாத நிறுவனங்களை கண்காணிக்க செபிக்கு எந்த அளவிற்கு அதிகாரம் உள்ளது என்பது குறித்து, கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகத்துடன் ஆலோசனை செய்து வருவதாக பாண்டே தெரிவித்துள்ளார்.

அபாயங்கள் என்ன?



* பட்டியலிடப்படாத நிறுவனங்களின் பங்குகள் என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ., சந்தைகளில் வர்த்தகம் ஆகாது

* உடனடியாக பங்குகளை விற்பது சிரமம்; வாங்கும் ஆட்களை தேட வேண்டியிருக்கும்

* பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆகாததால், விலையும் ஒரே மாதிரியாக இருக்காது

* செபியின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டவை அல்ல என்பதால், தகவல்களை முறையாக வெளியிட வேண்டிய கட்டாயம் இல்லை

* நிறுவனங்களை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வதில் முதலீட்டாளர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

Advertisement