பெங்களூரு 'ஹாட்ரிக்' வெற்றி: ராதா யாதவ், ஷ்ரேயங்கா அசத்தல்
நவி மும்பை: ராதா யாதவ் (66 ரன்), ஷ்ரேயங்கா (5 விக்.,) கைகொடுக்க பெங்களூரு அணி, 32 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.
நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் ('டி-20') தொடருக்கான லீக் போட்டியில் குஜராத், பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற குஜராத் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
பெங்களூரு அணிக்கு கிரேஸ் ஹாரிஸ் நல்ல துவக்கம் தந்தார். ரேணுகா சிங் வீசிய முதல் ஓவரில் 4 பவுண்டரி உட்பட 23 ரன் விளாசினார் கிரேஸ். முதல் விக்கெட்டுக்கு 26 ரன் சேர்த்த போது காஷ்வீ பந்தில் கிரேஸ் (17) அவுட்டானார். அடுத்து வந்த ஹேமலதா (4) சோபிக்கவில்லை. ரேணுகா 'வேகத்தில்' கேப்டன் ஸ்மிருதி மந்தனா (5) வெளியேறினார். சோபி டெவின் பந்தில் கவுதமி நாயக் (9) ஆட்டமிழந்தார். பெங்களூரு அணி 5.3 ஓவரில், 43/4 ரன் எடுத்து தடுமாறியது.
பின் இணைந்த ராதா யாதவ், ரிச்சா கோஷ் நம்பிக்கை தந்தனர். ஜார்ஜியா வீசிய 8வது ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் ராதா. இவருக்கு ஒத்துழைப்பு தந்த ரிச்சா கோஷ், ஜார்ஜியா, டெவின் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். டெவின் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ராதா, பிரிமியர் லீக் அரங்கில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்த போது ஜார்ஜியா பந்தில் ரிச்சா கோஷ் (44) அவுட்டானார். காஷ்வீ வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சர் விளாசிய நாடின் டி கிளார்க் (26), டெவின் பந்தில் அவுட்டானார். அபாரமாக ஆடிய ராதா, 66 ரன்னில் (3x6, 6x4) ஆட்டமிழந்தார்.
பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது. அருந்தி (2) அவுட்டாகாமல் இருந்தார். குஜராத் அணி சார்பில் டெவின் 3, காஷ்வீ 2 விக்கெட் வீழ்த்தினர்.
சவாலான இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு சோபி டெவின் (8) சோபிக்கவில்லை. பெத் மூனே (27) ஆறுதல் தந்தார். கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் (3) ஏமாற்றினார். கனிகா (16), ஜார்ஜியா (13), காஷ்வீ (18) நிலைக்கவில்லை. பாரதி புல்மாலி (39), தனுஜா (21) ஓரளவு கைகொடுத்தனர். ஷ்ரேயங்கா பாட்டீல் பந்தில் ரேணுகா (2) அவுட்டானார்.
குஜராத் அணி 18.5 ஓவரில், 150 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. பெங்களூரு சார்பில் ஷ்ரேயங்கா 5, லாரன் பெல் 3 விக்கெட் சாய்த்தனர்.
மேலும்
-
டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் தொடர்ந்தால் 25,850 வரை சென்று திரும்பலாம்
-
ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.4 லட்சத்தை எட்ட வாய்ப்பு
-
மாபெரும் மாற்றத்தில் இந்திய நுகர்வு முறை: முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
-
அதிகாரிகள் மிரட்டலால் 'பார்'களில் ஹிந்தி அழிப்பு
-
பட்டியலிடப்படாத நிறுவனங்கள் கட்டுப்படுத்த செபி ஆலோசனை
-
மியூச்சுவல் பண்டு கட்டணங்கள் குறைகிறது