மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில், பா.ஜ. கூட்டணி அபாரம்! : தாக்கரே ஆதிக்கம் முடிந்தது

1

மும்பை : மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில், பா.ஜ., தலைமையிலான 'மஹாயுதி' கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தம், 29 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில், 25ஐ பா.ஜ., கூட்டணி கைப்பற்றும் நிலை உருவாகி உள்ளது. மும்பை மாநகராட்சியை கைப்பற்றியதன் வாயிலாக, 28 ஆண்டு கால தாக்கரே ஆதிக்கத்திற்கு பா.ஜ., முடிவுரை எழுதியுள்ளது. காங்கிரஸ், சரத்பவார் கட்சிகளும் மாநகராட்சி தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இதன் மூலம் மஹாராஷ்டிரா அரசியலில் பா.ஜ.,வின் கை ஓங்கி வருகிறது.

மஹாராஷ்டிராவில் மும்பை, புனே உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், ஆளும் பா.ஜ., - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா அடங்கிய 'மஹாயுதி' கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.

வெற்றிக்கனவு





மும்பையில் மொத்தமுள்ள 227 வார்டுகளில், பெரும்பான்மைக்கு தேவையான 114 இடங்களை மஹாயுதி கூட்டணி கைப்பற்றியது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா - ராஜ் தாக்கரேவின் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கூட்டணி 78 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
இதன் மூலம், ஆசியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை மாநகராட்சி, 28 ஆண்டுகளுக்கு பின் தாக்கரே வசம் இருந்து பா.ஜ., வசம் வந்துள்ளது.

நாக்பூரிலும் 80 வார்டுகளுக்கு மேல் பா.ஜ.,வே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால், வெற்றிக் கனவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

மாநகராட்சி தேர்தலுக்காக மஹாயுதி கூட்டணியை உடைத்த, துணை முதல்வரான தேசியவாத காங்., தலைவர் அஜித் பவார், தன் மாமாவான சரத்பவாரின் தேசியவாத காங்., கட்சியுடன் கூட்டணி வைத்தார். புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சியை கைப்பற்றுவதற்காக இந்த வியூகத்தை அவர் வகுத்தார்.


ஓங்கியது





ஆனால், பா.ஜ.,வின் அதிரடியான காய் நகர்த்தல்கள் பவார் கோட்டையையும் தகர்த்து விட்டது. அங்கும் பா.ஜ.,வின் கையே ஓங்கி இருக்கிறது.
மாநகராட்சி தேர்தல் முடிவு, சிவசேனா தலைவரும், துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கு பெரும் புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. இவரது கட்சி, மும்பை மெட்ரோபாலிட்டன் பகுதிகளில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக, தானே, கல்யாண் - டோம்பிவிலி மற்றும் மும்பை புறநகர் பகுதிகளில், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா அபார வெற்றி பெற்றுள்ளது.

''பழங்கதை பெருமைகளுக்கு பதிலாக வளர்ச்சி மற்றும் அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இந்த வெற்றி சாத்தியமானது. அது தான் உண்மையான சிவசேனாவின் தாரக மந்திரம்,'' என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.


தொழில் நகரம்






நவி மும்பையிலும், பா.ஜ.,வுக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஷிண்டேவின் சிவசேனா கணிசமான வார்டுகளை கைப்பற்றி இருக்கிறது. இதனால், நவி மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள தொழில் மற்றும் சேட்டிலைட் நகரங்களின் பிடி, பா.ஜ., கூட்டணி வசமாகி இருக்கிறது.
மாநகராட்சி தேர்தலை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளுக்கு யதார்த்தம் என்னவென்பதை புரிய வைத்துள்ளது.

தேர்தலுக்காக பிரிந்திருந்த உத்தவ், ராஜ் தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைந்து மாறி மாறி பிரசாரம் செய்தும், அவர்களால் இந்த தேர்தலில் சாதிக்க முடியவில்லை.

மத்திய மும்பை மற்றும் கொங்கன் மண்டலத்தில் மட்டுமே அவர்களுக்கு ஆறுதலான வெற்றி கிடைத்துள்ளன.

அதே போல் லத்துார் மற்றும் கோலாபூர் பகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்., கட்சிகள் சாதித்துள்ளன. மொத்தம் உள்ள 29 மாநகராட்சிகளில், 25க்கும் மேற்பட்ட மாநகராட்சிகளை பா.ஜ., கூட்டணி கைப்பற்றும் நிலை உருவாகி உள்ளது.

லோக்சபா, சட்டசபை, ஊரக உள்ளாட்சித் தேர்தல் அதை தொடர்ந்து மாநகராட்சி தேர்தல் என அனைத்திலும் பா.ஜ., தொடர் வெற்றியை சந்தித்து வருவது, மஹாராஷ்டிராவின் அரசியல் முகம் மாறி இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளது.

@block_B@ பிரதமர் பெருமிதம் பிரதமர் மோடி கூறியதாவது: மஹாராஷ்டிரா மக்களுக்கு மனமார்ந்த நன்றி. தே.ஜ., கூட்டணியின் வளர்ச்சி திட்டங்களுக்கும், நல்லாட்சிக்கும் மிகப் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. மஹாராஷ்டிராவில் நடந்த பல்வேறு உள்ளாட்சி தேர்தல்களில் கிடைத்த வெற்றியின் வாயிலாக, அம்மாநில மக்களுக்கும், தே.ஜ., கூட்டணிக்கும் இடையிலான நட்புறவு வலுவாகி இருக்கிறது. முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிப்பதற்கும், மாநிலத்தின் கலாசாரத்தை கொண்டாடுவதற்கும் கிடைத்த பெரும் பரிசு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.block_B

@block_B@ 'வளர்ச்சி, நேர்மைக்காக மக்கள் கொடுத்த வெற்றி' தேர்தல் வெற்றி குறித்து மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது: மாநகராட்சி தேர்தலில் வளர்ச்சிக்கான திட்டத்தை மக்கள் முன் பா.ஜ., வைத்தது. அதை அவர்கள் நேர்மறையாக ஏற்றுக் கொண்டனர். இதனால், மாநகராட்சி தேர்தலில் வரலாறு காணாத வெற்றி கிடைத்துள்ளது. மக்கள் நேர்மை, வளர்ச்சியை விரும்புகின்றனர். அதற்காகவே, பா.ஜ.,வுக்கு அவர்கள் ஓட்டளித்துள்ளனர். பிரதமர் மோடி மீதும், பா.ஜ., கூட்டணி மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, இந்த தேர்தலில் எதிரொலித்து உள்ளது. தேர்தல் வெற்றியை மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்துவதற்காக மாற்றுவோம். ஹிந்துத்வா தான் எங்களின் ஆத்மா. ஹிந்துத்வாவையும், வளர்ச்சியையும் யாராலும் பிரிக்க முடியாது. அனைத்தையும் உள்ளடக்கியதே ஹிந்துத்வா. இவ்வாறு அவர் கூறினார்.block_B

Advertisement