பார்லி., விசாரணை குழுவுக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தள்ளுபடி பணமூட்டை விவகாரம்:

டில்லி வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், பார்லிமென்ட் விசாரணைக் குழுவுக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

நோட்டீஸ் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, அங்குள்ள அரசு பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இவரது வீட்டில், கடந்தாண்டு மார்ச் 14ல் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் போது, வீட்டின் ஒரு அறையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் அடங்கிய மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த விவகாரம், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது கடும் விமர்சனங்களை வைத்தது. இதையடுத்து, அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, ஆளும் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 146 எம்.பி.,க்கள், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் அளித்தனர்.

தடையில்லை நீதிபதி யஷ்வந் த் வர்மா மீதான புகாரை விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய விசாரணைக் குழுவை ஓம் பிர்லா அமைத்தார்.

இதை எதிர்த்து, யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை, நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் எஸ்.சி.ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

நீ திபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தை, பார்லிமென்ட் சரியான முறையில் கையாண்டது. பார்லிமென்டில் அமைக்கப்பட்ட விசாரணை குழு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டது.

யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை பார்லி., விசாரணை குழு விசாரிக்க எந்த தடையும் இல்லை. அதற்கு எதிரான நீதிபதியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது-.


இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

-- டில்லி சிறப்பு நிருபர் -:

Advertisement