'வாக்கி டாக்கி' விற்பனை: 8 கம்பெனிகளுக்கு அபராதம் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அதிரடி

புதுடில்லி: சட்டவிரோதமாக வாக்கி டாக்கிகளை ஆன்லைனில் விற்பனை செய்ததற்காக, மெட்டா, அமேசான், பிளிப்கார்ட், மீஷோ ஆகிய நிறுவனங்களுக்கு, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தலா 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இந்தியாவில், 446 மெகாஹெர்ட்ஸ் வரையிலான அலைவரிசையில் இயங்கும், தகவல் தொடர்பு கருவிகளை பயன்படுத்த உரிமம் தேவையில்லை.

ஆனால், பல ஆன்லைன் தளங்களில் இதைவிட அதிக திறன் கொண்ட கருவிகளை விற்றது விசாரணையில் தெரிய வந்தது. இறக்குமதி அல்லது விற்கப்படும் எந்தவொரு வயர்லெஸ் கருவிக்கும், இ.டி.ஏ., எனும் உபகரண அங்கீகார சான்றிதழ் பெறாதது, அதிக திறன் கொண்ட வாக்கி -டாக்கிகளை பயன்படுத்த உரிமம் தேவை என தெரிவிக்காமல் விற்பனை செய்வது ஆகிய விதிமீறல்கள் இதில் கண்டுபிடிக்கப்பட்டன.

சிமியா, ஜியோமார்ட், டாக் புரோ, மீஷோ, மாஸ்க்மேன் டாய்ஸ், டிரேடு இந்தியா, ஆன்ட்ரிகிஷ் டெக்னாலஜீஸ், வர்தான்மார்ட், இந்தியா மார்ட், பேஸ்புக் மார்க்கெட் பிளேஸ், பிளிப்கார்ட், கிருஷ்ணா மார்ட், அமேசான் ஆகிய 13 நிறுவனங்கள், உரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல், 16,970 வாக்கி டாக்கிகளை விற்பனைக்கு பட்டியலிட்டது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, 13 ஆன்லைன் நிறுவனங்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், மத்திய நுகர்வோர் நலத்துறை செயலர் நிதி கரே கூறுகையில், “நுகர்வோர் உரிமைகளை மீறியதுடன், தவறான விளம்பரங்கள் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபட்டதற்காக எட்டு நிறுவனங்களுக்கு, மொத்தம் 44 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில், மீஷோ, மெட்டா, பிளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிமியா, ஜியோமார்ட், டாக் புரோ, மாஸ்க்மேன் டாய்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

மீதமுள்ள நிறுவனங்கள் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணையில் உள்ள நிலையில், பின்னர் முடிவெடுக்கப்படும்” என்றார்.

Advertisement