எம்ஜிஆர் 109வது பிறந்த நாள்... இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை
சென்னை: எம்ஜிஆரின் 109வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் மரியாதை செலுத்தினார். இதேபோல, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆருக்கு இன்று 109வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் உள்ள அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், அவரது புகைப்படத்திற்கு, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.'
அந்த வகையில், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் கலந்து கொண்டார். அங்குள்ள கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிய அவர், முன்னதாக, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், இனிப்புகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, 109 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இபிஎஸ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, முனுசாமி, வைத்தியலிங்கம், வளர்மதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை தொண்டர்களுக்கான இயக்கமாக உருவாக்கியவர் எம்ஜிஆர். தேர்தல் நிலைப்பாடு மற்றும் யாருடன் கூட்டணி என்பதை, இன்னும் சில தினங்களில் அறிவிப்பேன். அதிமுகவிலிருந்து பிரிந்த சக்திகள் அனைவரும் இணைய வேண்டும்," எனக் கூறினார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் எந்தக் கூட்டணியில் இணைகிறோம் என்பதை உரியவர்கள், உரிய நேரத்தில் அறிவிப்பார்கள். கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி வெளிப்படையாக அறிவித்த பிறகு தான், நாங்கள் வெளிப்படையாக சொல்ல முடியும். அதுவரை என்னை அமைதியாக இருக்க விடுங்கள்," என்றார்.