கர்நாடகாவில் 11 மாதங்களில் ரூ.4.71 லட்சம் கோடி முதலீடு

1

பெங்களூரு:கடந்த 11 மாதங்களில், 4.71 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை கர்நாடகா பெற்றுள்ளதாக, அம்மாநில தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

கடந்த 2025 பிப்ரவரியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், கர்நாடகாவில் 10.27 லட்சம் கோடி முதலீடு செய்ய உறுதியளிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 11 மாதங்களில் 4.71 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, 46 சதவீதம்.

உலக முதலீட்டாளர் மாநாட்டின்போது, தயாரிப்பு துறையில் முதலீடு செய்வதாக உறுதியளிக்கப்பட்டிருந்த 5.66 லட்சம் கோடி ரூபாயில், 3.22 கோடி ரூபாய் இதுவரை பெறப்பட்டுள்ளது.

இது மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட 58 சதவீதம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 4.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உலக நிறுவனங்கள் உறுதியளித்திருந்தன. அதில் தற்போது 1.41 லட்சம் கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்புத் துறைக்கு உறுதி அளிக்கப்பட்டிருந்த 45,000 கோடி ரூபாய் முதலீட்டில், 8,500 கோடி ரூபாய் இதுவரை பெறப்பட்டுள்ளது.

அன்னிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற நிலையை தாண்டி, நில ஒதுக்கீடு, சட்டப்பூர்வ அங்கீகாரங்கள், டிஜிட்டல் முறையில் விண்ணப்பம் போன்ற அடுத்த கட்டங்களுக்கும் கர்நாடகா முன்னேறியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement